உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அரேபிய தீபகற்ப நாடான ஏமனில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் அரசின் ராணுவத்துக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படைகள் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, வடக்கு ஏமனில் உள்ள ஹஜ்ஜா நகர் அருகே ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதற்காக உள்ளூரைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் அந்த வீட்டில் திரண்டு இருந்தனர். ஆனால் அங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூடி தாக்குதலுக்கு திட்டமிடுவதாக அரசு படைகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படைகள் அங்கு விரைந்து சென்று வான்வழித் தாக்குதலை மேற்கொண்டன. அந்த வீட்டின் மீது போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின.

இதில், ஏராளமான குழந்தைகள் உள்பட 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் 30 குழந்தைகள் உள்பட 46 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஹஜ்ஜா நகர ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக சவுதி கூட்டுப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், சவுதி கூட்டுப்படைகள் ஒருபோதும் பொதுமக்களை குறிவைத்து வான்வழியாக தாக்குவதில்லை. இந்த குறி தவறிய தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

அதேநேரம் சவுதி கூட்டுப்படைகள் அப்பாவி மக்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு பல தடவை கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி தவறுதலாக ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள், சந்தை பகுதிகளில் அப்பாவி மக்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஏமனில், உள்நாட்டு போர் காரணமாக இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 20 லட்சம் பேர் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்