உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வடக்கு, கிழக்கு மக்களின் சட்டபூர்வ உரித்துடைய காணிகள், அம்மக்களுக்குக் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து, இவ்வாண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அக்காணிகளை விடுவிப்பதை நிறைவுசெய்யுமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, மூன்றாவது தடவையாக நேற்று முன்தினம் (03) பிற்பகல் ஒன்று கூடியது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின்போதே, ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்தார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவால் நேற்று (04) விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை தெரிவித்தது.

முறையான காலச் சட்டகத்துக்குள், காணிகளை விடுவிக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறும், இதன் முன்னேற்ற நிலைமைகளை, அடுத்த மாதம் இடம்பெறும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின்போது முன்வைக்குமாறும், ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தாரெனவும், அவ்வறிக்கை தெரிவித்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில், படையினர் வசமுள்ள பாடசாலைகளுக்குச் சொந்தமான காணிகளையும் கட்டடங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அம்மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும், இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது என அறிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, திருகோணமலை, அக்கரைப்பற்று, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சினைகள், வரட்சி ஆகியன தொடர்பாக, விரிவாகக் கவனஞ்செலுத்தப்பட்டது.

அதேபோல், நீண்டகால யுத்தத்தின் காரணமாக வடக்கு, கிழக்கு மக்கள் இழந்த அபிவிருத்தியின் நன்மைகளை, மீண்டும் அம்மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று, ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இச்செயலணிக் கூட்டத்தில், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்