உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வடக்கு மாகாணத்தில் காணப்படும் மொழி பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.ஐவரடங்கிய குறித்த விசேட குழு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில், வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக, அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனடிப்படையில் குறித்த மொழிக்குழுவின் தலைவராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழுவின் உறுப்பினர்களாக பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாள் அதிபர் எஸ்.பத்மநாதன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் எஸ்.லலீஸன், யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் அதிபர் மொஹைதீன் ஹனி சேகு ராயீத், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதர்ஷி பெர்னாண்டோ ஹப்புகொட்டுவ ஆகியோரே இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் மொழி கொள்கைகளை அமுல்படுத்தும்போது எழும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்தக் குழுவுக்கு அறிவித்து உரிய ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு இது தொடர்பான முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் இருப்பின் அவற்றை தலைவர், மொழிக்குழு, ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, கண்டி வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கோ அல்லது 021 221 9374 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ அனுப்பிவைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்