யாழ் வரணிப் பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.தாக்குதல் சம்பவத்தில் 48 வயதுடைய நபர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
கோவில் பிரச்சனை காரணமாக, வெளிநாட்டில் வசிக்கும் நபரொருவரின் ஆலோசனையின் பேரில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில்
மேலும் தெரியவருவதாவது ,
தாக்குதலுக்குள்ளான நபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளார். அக்கால பகுதியில் ஊரில் உள்ள கோயில் ஒன்றின் பிரச்சனையில் தலையிட்டு உள்ளார். அதன் போது வெளிநாட்டில் வசிக்கும் நபரொருவர், குறித்த நபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோயில் பிரச்சனை தொடர்பில் வாக்கு வாதப்பட்டதுடன் , கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் 12 நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று கோயிலில் பிரச்சனையில் தலையிட்டவரின் வீட்டுக்குள் புகுந்து, சரமாரியாக வாளினால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க முற்பட்ட வயோதிப தாய் தந்தையையும் தாக்கியுள்ளனர்.அதன் பின்னர் அங்கிருந்து வாள் வெட்டு குழுவினர் தப்பி சென்றுள்ளனர்.
அதையடுத்து வாள் வெட்டுக்கு இலக்கான நபர் அங்கிருந்து மீட்கப்பட்டு வரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸ் விசாரணையின் போது தாக்குதலுக்கு இலக்கானவர் வாக்குமூலம் அளிக்கையில் , தான் கோயில் பிரச்சனையில் தலையிட்டமை தொடர்பில், வெளிநாட்டில் இருந்து ஒருவர் தன்னை தொலைபேசியில் மிரட்டியாதகவும் , அவரே இங்கே கூலிக்கு வாள் வெட்டுக்குழுவை அமர்த்தி தன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.