தமிழில் எழுத
பிரிவுகள்


கனடாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் நான்காவது முறையாக கனடாவில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.
கடந்த வெள்ளியன்று கனேடியப் பாராளுமன்றில் இடம்பெற்ற ஹார்ப்பரின் சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் ஹார்ப்பர் அரசாங்கம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து புதிய தேர்தல் இடம்பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்திருப்பது என்பன நாட்டினது பொருளாதாரத்திற்கும் நாட்டிற்கும் பாதகமாகவே அமையும் எனக் ஹார்ப்பர் அரசாங்கத்தவர் கூறுகிறார்கள்.

ஹார்ப்பர் அரசாங்கத்தின் இந்தத் தோல்வியினைத் தொடர்ந்து கனடாவின் நாற்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்படவிருக்கிறது. நாளுக்குநாள் சவால் நிறைந்ததாக மாறிவரும் பூகோளப் புறநிலையில் கனேடியத் தேசத்தினது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது எங்கள் அனைவரினதும் கடமை என கடந்த வெள்ளியன்று பாராளுமன்றில் பிரதமர் ஹார்ப்பர் தெரிவித்திருந்தார்.

ஹார்ப்பர் அரசாங்கத்தினது பாராளுமன்றில் தாங்கள் வைத்திருந்த நம்பிக்கையினை இழந்து விட்டோம் எனக்கூறி லிபரல் கட்சியின் தலைமையிலான கூட்டணியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் கிடைத்திருந்தன.

வாக்கெடுப்பு முடிவு அறிவிக்கப்பட்டதோடு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் காகிதங்களை எறிந்த அதேநேரம் ஹார்ப்பரின் கென்சவேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் முகத்தில் ஈயும் ஆடவில்லை.

வீழ்ச்சி காணும் கனேடியப் பொருளாதாரத்தினைத் தூக்கி நிறுத்துவதற்கான வரவுசெலவுத் திட்டம் எனக்கூறி கடந்த வாரம் ஹார்ப்பர் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தினைச் சமர்ப்பித்திருந்தது. இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தல் பிரசாரங்களின் போது இந்த வரவுசெலவுத்திட்ட வரைபுதான் தங்களுக்கு வாக்குகளை அள்ளித் தரப்போகும் பலம் என கென்சவேட்டிவ் கட்சியினர் கூறுகிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஹார்ப்பரின் கென்சவேட்டிவ் அரசாங்கம் தோல்வியடைந்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்கு பிரதமர் ஹார்ப்பர் மறுத்துவிட்டார். தற்போது கிடைக்கப்பெற்றிருக்கும் தகவலின்படி மே இரண்டாம் திகதி கனடாவில் பொதுத்தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்