உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தமிழகம் சென்னையில் இலங்கை பெண்கள் இருவரை மர்மக்கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க் கிழமை மாலை இலங்கையில் இருந்து பாத்திமா, திரேசா ஆகிய இரு கர்ப்பிணிகள் வந்திறங்கினர். அந்த இரு பெண்களின் நடவடிக்கையில் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.அப்போது பணியில் இருந்த சுங்கத்துறை பெண் அதிகாரிகளான அம்ரூத் திரிபாதி, ரேணுகுமாரி ஆகியோர், இரு இலங்கை பெண்களையும் சோதனையிட்டனர். அவர்களது ஆடைக்குள் எந்த ஒரு பொருளும் இல்லை என்பது தெரியவந்தது.

இருந்தாலும் அவர்களது பாஸ்போர்ட்- விசா போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டு, பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இரு பெண்களின் வயிற்றையும் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அவர்களது வயிற்றுக்குள் கரையாத கேப்ஸ்யூல் வடிவில் 1800 கிராம் எடை கொண்ட தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது, சரியாக இரண்டு கார்களில் வந்த மர்மக் கும்பல் பாத்திமா, திரேசா ஆகிய இருவரையும் தங்கள் கார்களில் ஏற்றி அழைத்துச்சென்றது. சுங்கத்துறை பெண் அதிகாரிகளோ தங்களை அந்த கும்பல் தாக்கி விட்டு இருவரையும் கடத்திச்சென்று விட்டதாகவும், வழக்குப் பதிவு செய்யாமல் விசாரித்து இருவரையும் மீட்டுக் கொடுக்கும்படியும் பல்லாவரம் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

உடலை ஸ்கேன் செய்யும் மையம் விமான நிலையத்திற்குள்ளேயே இருக்கும் நிலையில், இரு பெண்களையும் எதற்காக வெளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தீர்கள் என்றும், நீங்கள் இங்கு வந்திருப்பது கடத்தல் கும்பலுக்கு எப்படி தெரியவந்தது என்றும் பொலிசார் கேள்வி எழுப்பினர். அதற்கு சுங்கத்துறை பெண் அதிகாரிகள் உரிய பதில் சொல்ல இயலாமல் விழித்துள்ளனர். இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு பல்லாவரம் போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் புதன்கிழமை காலையில் விமான நிலையம் சென்ற இரு பெண்களும், தங்களை கடத்திச்சென்ற கும்பல் இனிமா கொடுத்து வயிற்றில் இருந்த 1800 கிராம் எடை கொண்ட தங்க கேப்சூல்களை எடுத்துக் கொண்டு விரட்டி விட்டதாகவும், தங்களது பாஸ்போர்ட்டையும் விசாவையும் தந்தால் சொந்த நாட்டிற்கு சென்று விடுவதாகவும் தெரிவித்தனர்.

அவர்களை மடக்கிப்பிடித்து நடத்திய விசாரணையில், தங்களை கடத்திச்சென்றவர்கள் யார் என்று தெரியாது என்று கூறியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தங்களை அழைத்துச்சென்று தங்கத்தை பெற விமான நிலையத்தில் காத்திருந்தவர்கள், தாங்கள் சிக்கியதை பார்த்து தப்பிவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தங்க கடத்தல் வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடத்தல் கும்பலை பிடித்து தங்கத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே இவர்கள் இருவரையும் கடத்திச்சென்றது எந்த கும்பல்? ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட வேண்டிய இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியது யார்? அங்கு அழைத்து செல்லப்படும் தகவலை கடத்தல் கும்பலுக்கு விமான நிலையத்தில் இருந்து தகவல் அளித்தது யார் ? என்ற கேள்விகளுடன் சுங்கத்துறை அதிகாரிகளான அம்ரூத் திரிபாதி, ரேனுகுமாரி ஆகிய இருவரிடமும் சுங்கத்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவதையடுத்து இந்த கடத்தல்களுக்கு துணையாக இருக்கின்ற சுங்கத்துறையில் உள்ள அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவருகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்