உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்ப்பாணதில்  பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குட்டி என அழைக்கப்படும் கொள்ளையன் உள்ளிட்ட நால்வர், கோப்பாயில் வீடொன்றில் மறைந்திருந்த போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நவாலியில் திருமண வீடொன்றில் புகுந்து காணொலியைக் காண்பித்து 60 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரில் குட்டி என அழைக்கப்படும் கொள்ளையன் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் மானிப்பாய், கோப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த குட்டி ஏற்கனவே பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்களால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து தண்டனைக் காலம் நிறைவடைந்து சிறையிலிருந்து வெளிவந்த பின்பும் கொள்ளைகளில் ஈடுபட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து சந்தேகநபர்கள் நால்வரும் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டை திங்கட்கிழமை முற்றுகையிட்ட கோப்பாய் பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் குட்டி உள்ளிட்ட மூவர் நவாலி தெற்கு கொத்துக்கட்டி வீதி கடந்த ஒகஸ்ட் 29ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலும் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதிகாலை 1.30 மணியளவில் 6 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் வீட்டின் முன்வாயில் வழியாகவும் சமையல் அறையின் மேற்பகுதி வழியாகவும் வீட்டுக்குள் நுழைந்தது.வீட்டில் இருந்த பெரிய தந்தை வழிமுறையான ஒருவரைக் கட்டிவைத்துவிட்டு நடைபெற்ற திருமண நிகழ்வின் காணொலிப்பதிவை காண்பித்து அதில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை தருமாறு கொள்ளைக் கும்பல் கத்தி முனையில் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியது.

கும்பலின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாததால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது கும்பல் வாளால் வெட்டியதுடன் தாக்குதலையும் நடத்தியது. நிலமையை உணர்ந்த பெண்ணொருவர் சகல நகைகளையும் எடுத்து தருவதாககூறிய நிலையில் அந்தக் கும்பல் ஒவ்வொரு இடமாகத் தேடி அனைத்து நகைகளையும் பெற்றுக்கொண்டனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 60 பவுண் நகை கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் குட்டி உள்ளிட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட கொள்ளைச் சம்பவங்களை தொடர்பான வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நேற்றுமுன்தினம் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்குகளை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேகநபர்களை வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதேவேளை, ஏனைய இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்