உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இந்தியாவையும் தமிழ் மக்களையும் குழப்பும் வகையில் கோட்டாபயவும் மஹிந்தவும் கருத்துக்களை வெளியிட்டால் அது அவர்களுக்குத்தான் பாதகமாக அவமானமாக அமையும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இருவேறு நிலைப்பாட்டில் இருப்பதை உணர முடிகிறது.

இது தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதில் அரசு நாடாகமாடத் தொடங்கியுள்ளது. அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கிடையில் உண்மையில் முரண்பாடு நிலவுகின்றதா?

அல்லது அவர்களுக்கு அரசியல் தெரியவில்லையா? அல்லது இந்தியாவும் தமிழ் மக்களும் முட்டாள்கள் என்ற நினைப்பில் அவர்கள் கருத்துக்களை வெளியிடுகின்றார்களா? என்று பல கோணங்களில் கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ராஜபக்ச சகோதரர்கள் உடனடியாக வழங்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது மிகவும் அவசியம் என்று இந்தியாவில் அவர் முன்னிலையில் வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இதற்குத் தலையாட்டும் வகையில் பாசாங்கு செய்த ஜனாதிபதி கோட்டாபய, இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவதற்கிடையில் அங்கு வைத்தே 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூறியிருந்தார்.

ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் தன்னைச் சந்தித்த உள்நாட்டு, வெளிநாட்டு முக்கியஸ்தர்களிடமும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவரின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
ஒரே அரசின் முக்கியஸ்தர்களான தம்பியும், அண்ணனும் இப்படி ஏன் மாறுபட்ட விதத்தில் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் என்று தெரியவில்லை.

அவர்கள் இருவரும் உண்மை முகத்தைக் காட்ட வேண்டும். இந்தியாவையும் தமிழ் மக்களையும் குழப்பும் வகையில் கோட்டாபயவும் மஹிந்தவும் கருத்துக்களை வெளியிட்டால் அது அவர்களுக்குத்தான் பாதகமாக அவமானமாக அமையும்” என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்