உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இன்று திங்கட்கிழமை ஜெனீவா நோக்கி புறப்படவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் கால அவகாசம் கோரிய 34/1, 40/1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மனித உரிமைகள் பேரவையின் தலைவர் எலிச​ெபத் டிவ்-பிஸ்ல்பர்கரிடம் நேற்றுமுன்தினம் நேரில் எடுத்துரைத்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை குறித்த விவாதத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவிருப்பதன் முன்னாயத்தமாக தெரியப்படுத்தும் முகமாக இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இன்றைய தினம் ஆரம்பமாகும் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டுக்கு மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட், பதிலளிப்பார் என தமிழ் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இன்று ஆரம்ப உரையை நிகழ்த்த உள்ளதுடன், 26ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
இதன்போதே வெளிவிவார அமைச்சர் தினேஷ் குணவர்தன, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு வழங்கிய இணைஅனுசரணை மற்றும் 2017, 2019 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கும் தீர்மானத்துக்கும் வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெறும் அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார்.

சர்வதேச பங்களிப்புடன் விசாரணை பொறிமுறை, காணாமல்போனோர் அலுவலகத்ததை ஸ்தாபித்தல், நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தல், இனப்பிரச்சினைக்கு தீர்வு, நிலைமாறுகால நீதி உட்பட பல்வேறு பரிந்துரைகள் 30/1 தீர்மானத்தில் முன்மொழியப்பட்டன. என்றாலும், 2017ஆம் ஆண்டுவரையான இரண்டுவருட காலப்பகுதியில் குறித்த தீர்மானத்தின் யோசனைகளை அப்போதைய அரசாங்கத்தால் அமுல்படுத்த முடியாது போனது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற 34ஆவது கூட்டத் தொடரில் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டுவருட கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் கோரியதன் அடிப்படையில் 34/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கைக்கு இரண்டு வருடகாலம் அவகாசம் வழங்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு 40ஆவது கூட்டத்தொடருடன் குறித்த இரண்டுவருடகால அவகாசம் முடிவடைந்திருந்த நிலையில் மீண்டும் இரண்டுவருடகால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் கோரியது.

அதனை கருத்தில் கொண்டு 40/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கைக்கு மேலும் இரண்டுவருடகாலம் அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிரகாரம்; 30/1 தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கைக்கு 2021ஆம் ஆண்டுவரை இரண்டுவருடகாலம் அவகாசம் அளிக்கப்பட்டது.

இவ்வாறான பின்புலத்திலேயே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2015ஆம் ஆண்டு 30/1 தீர்மானம் மற்றும் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ள 34/1, 40/1 தீர்மானங்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த இணை அனுசரணையை இன்று ஆரம்பமாகவுள்ள 43ஆவது கூட்டத்தொடரில் வாபஸ் பெற போவதாக அறிவித்துள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், பாராளுமன்றத்திலும் அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்