உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்லிபியாவின் மிஸ்ரட்டா நகரின் மீது கடாபிப் படைகள் கொத்து வெடிகுண்டுகளை தொடர்ந்து வீசி வருவதால் அங்கு பீதி நிலவுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. லிபியாவின் மிஸ்ரட்டா நகரின் மீது கடந்த இருநாட்களாக கடாபிப் படைகள் கொத்து வெடிகுண்டுகள் மற்றும் கொத்து ராக்கெட்டுகளை குடியிருப்புப் பகுதிகள் மீது வீசி மக்களைக் கொன்று வருகின்றன.

நேற்று முன்தினம் நடந்த கொத்து குண்டு வீச்சில் 21 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து எதிர்த் தரப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: கடாபிப் படைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் இங்கில்லை.

வெளியில் இருந்து வரும் உதவிகள் போதவில்லை. மருத்துவமனைகள் அனைத்தும் கடாபிப் படைகள் வசம் இருக்கின்றன. இவ்வளவு நடந்தும் நேட்டோ படையின் பதில் தாக்குதல் நடந்ததாகவே தெரியவில்லை. கடந்த நான்கு நாட்களாக நேட்டோ படைத் தாக்குதல் நிகழவில்லை என்றார்.

மிஸ்ரட்டா நகருக்கு வெளியில் இருந்து உதவிகள் வரக் கூடிய துறைமுகப் பகுதி மற்றும் சிறிய, பெரிய தொழிற்சாலைகள் இயங்கும் தொழிற்பேட்டைப் பகுதிகளில் கடாபிப் படைகள் கொத்து வெடிகுண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன.

இதனால் காயம் அடைந்தோருக்கான உதவிகள் வெளியில் இருந்து கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதற்கிடையில் கடாபி அரசு அதிகாரிகளுடன் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர உதவி ஒருங்கிணைப்புக்கான சார்பு பொதுச் செயலர் வெலரி அமோஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

பெங்காசியில் அவர் நேற்று அளித்த பேட்டியில்,”போரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வது, தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பது இதற்காகவாவது தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை” என்றார்.

கொத்து வெடிகுண்டுகளின் தாக்குதல் தொடர்வதால் மிஸ்ரட்டா நகர்வாசிகள் பெரும் பீதியில் உள்ளனர். நேற்று முன்தினம் அந்நகரின் துறைமுகப் பகுதியில் 250 பேர் கூடி தங்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அஜ்தாபியாவிலும் நேற்று கடும் மோதல் தொடர்ந்தது. அந்நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசிக்குச் செல்லும் நுழைவாயில் வரை கடாபிப் படைகள் ஊடுருவி விட்டன.

இந்நிலையில் எதிர்த்தரப்பு வசம் உள்ள கிழக்குப் பகுதியில் எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்தி துவங்கும் வரை எண்ணெய் விற்பனை மேற்கொள்ளப்பட மாட்டாது என்று “தேசிய கவுன்சில்” அரசின் எண்ணெய் வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெயை கத்தார் நாட்டுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விற்ற இடைக்கால அரசு அதன் மூலம் 540 கோடி ரூபாய் ஈட்டியது. இப்பணத்தில் தான் கிழக்குப் பகுதி மக்களுக்கான உணவு, எரிபொருள் மற்றும் போருக்கான ஆயுதங்கள் வாங்கப்பட்டன.

சமீபத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீது நிகழ்ந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தான மதிப்பீடு நடந்து கொண்டிருப்பதால் அது முடியும் வரை எண்ணெய் விற்பனை இருக்காது என்று எதிர்த் தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்