உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்த ஆண்டு 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசியை தயாரிக்க சீனா இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷியா என முன்னணி நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை பல கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து கொண்டிருக்கின்றன.

இதையொட்டி சீனாவின் தேசிய சுகாதார கமிஷனை சேர்ந்த உயர் அதிகாரி ஜெங் ஜாங்வே, பீஜிங்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீனாவில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அரசு தீவிர ஆதரவு அளிக்கிறது. எனவே அடுத்த ஆண்டு நாட்டில் 100 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க இலக்கு வைத்துள்ளோம். சீனா இதில் முதல் இடம் பிடிக்கும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு என்பது 61 கோடி டோஸ்களாக இருக்கும். அடுத்த ஆண்டு இது 100 கோடிக்கும் மேல் இருக்கும். (அமெரிக்கா தடுப்பூசி நிறுவனங்களான பைஸரும், மாடர்னாவும் அடுத்த ஆண்டு தலா 100 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்க இலக்கு வைத்துள்ளன.)

தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக முதலில் மருத்துவ பணியாளர்கள், எல்லை பணியாளர்கள், முதியவர்கள் போன்ற முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் வினியோகிக்கப்படும்.

சீனாவில் 11 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகின்றன. அவற்றில் 4 தடுப்பூசிகள் மூன்றாவது இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவில் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ள 4 தடுப்பூசிகளில் ஒன்றான ‘கொரோனா வேக்’ என்ற தடுப்பூசியை சைனோவேக் என்ற தனியார் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை சில மாதங்களில் பீஜிங் நகருக்கு வெளியே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் யின் வீடோங் தெரிவித்தார்.

இதற்கிடையே 150 நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.

இதன் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயஸ், “சில நாடுகளில் உள்ள அனைத்து மக்களையும் விட எல்லா நாடுகளிலும் சிலருக்கு தடுப்பூசி போடுவதை குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்” என்று ஏற்கனவே கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்