உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினான் பாரதி. ஆனால் அவனது நினைவு நாட்களிலேயே, மீண்டும் ஒரு  ஒரு ஜாதிக் கலவரம் அரங்கேறியிருக்கிறது தமிழகத்தில். இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட கலவரம் என்ற குற்றச்சாட்டுக்களும் வருகிறது. ஏன்..? இப்பொழுதோ, சாதிகள் இல்லாமல் தமிழன் இல்லை என்ற நிலை. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் மிகவும் பெரிய தடைக்கல்லாக இருப்பது “சாதி”. பிரிவினைகளை தவிர்த்து மேம்பட வேண்டிய மனித சமுதாயம் சாதியால் தொடர்ந்து பிளவுபட்டு, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள எல்லைக்கோட்டை சிறிதாக்கிக்  கொண்டிருக்கிறது. சென்னை தமிழகத்தின் டெட்ராய்டாக மாறிக் கொண்டிருக்கிறது. திருப்பூர் நகரம் தமிழகத்தின் காட்டன்சிட்டியாக மாறிவிட்டிருக்கிறது. ஆனால் இன்னும் தென்மாவட்டங்களில் பஸ்கள் உடைப்பும், தீண்டாமை சுவர்களும் மக்களை வாழ்க்கை தரத்தை எட்டவிடாமல் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றன.
தென்மாவட்டங்களில் சாதி சார்பாக நடக்கும் விழாக்களில் எங்கு பார்த்தாலும் பிளக்ஸ் பேனர்கள். இந்த போஸ்டர்கள் கூட சாதிய வெறியை தூண்டியபடி நச்சு பரப்பியாக தொங்கி கொண்டிருக்கின்றன. எப்படி இருந்தார்கள் அந்த மன்னர்கள்? யாருக்கும் தெரியாது. ஆனால் உயர்த்திய நெஞ்சுடனும், கூரிய வாளுடனும் தென்மாவட்டங்களில் ஒட்டப்படும் சாதிய அடையாள சுவரொட்டிகளிலும், பிளக்ஸ் பேனர்களிலும் அவர்கள் கடும் கோபமான கண்களுடன் முறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மன்னர்களின் கம்ப்யூட்டர் போட்டோஷாப் உத்திகளால் மிகப்பெரிய வாயைப்பிளந்தபடி கம்ப்யூட்டர் சிங்கங்கள் உறுமிக் கொண்டிருக்கின்றன. இந்த போஸ்டர்களில் ” அடங்க பிறந்தவர்கள் அல்ல, அடக்கி ஆள பிறந்தவர்கள்” என்று கொட்டை எழுத்துக்களில் மிரட்டல் வேறு.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பலவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு தொழில்வளர்ச்சி என்பது இல்லை. மதுரையை தூங்காநகரம் என்பார்கள். காரணம், தமிழகத்தின் மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் விவசாய விளைபொருட்கள் யாவும் இரவு நேரங்களில் தான் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பிரித்து அனுப்பப்படுகின்றன. இதனால் நள்ளிரவு நேரம் வரை இட்லியும், சட்னியும் சுடச்சுட கிடைப்பதுண்டு.

பெரும்பாலும் உதிரி தொழில்கள் மூலம் தான் தென்மாவட்டத்தின் பெரிய நகரமான மதுரையே இயங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் உழைத்தால் பகலில் சாப்பாடு. தமிழகத்தின் ஏதென்ஸ் நகரம் என்றழைக்கப்படும் இந்த நகரத்தின் உண்மை நிலை இது தான். இதனை சுற்றி இருக்கும் தென்மாவட்டங்களின் நிலையும் இது தான்.

இவர்களின் உழைப்புக்கு ஒரு நாள் சிக்கல் வந்தால் கூட அது குடும்ப பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இப்படியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களை சாதியத்தின் கடுமை  ஆட்டிப்படைத்து வளரவிடாமலே தடுத்துக் கொண்டிருக்கிறது. நோய் நொடி இல்லாமல் வாழ அடிப்படை சுகாதார வசதிகள் வேண்டும் என்று கேட்டு இவர்கள் என்றைக்கும் பெரிய அளவில் போராடியது இல்லை. சென்னை, கோவை போல் தங்களது மாவட்டத்திற்கும் தொழில்வளர்ச்சி வேண்டும் என்று கேட்டு இவர்கள் போராடவில்லை. ஆனால், தங்கள் சாதிக்கு என்று ஒன்று வந்து விட்டால் எத்தகைய போராட்டத்தையும் நடத்த தயாராக இருக்கிறார்கள்.

தமிழகத்தை ஆண்ட கட்சிகள் பலவும் இன்றைக்கும் பார்ப்பனியத்தை பிடித்து தொங்கிக் கொண்டு இருப்பது கண்கூடு. உண்மையில் பார்ப்பனர்களிலும் பொங்கல், வடை விற்று பிழைப்பை ஓட்டும் அக்கரகாரத்து ஐய்யர்களும் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டில் நல்ல பணிக்கு வந்து அமர்ந்து கொண்டு கிடைத்த லஞ்சத்தை எல்லாம் வாங்கி கொழுத்து கார், பங்களா, வசதிகள் என்று சகல சௌபாக்கியங்களுடன் இருக்கும் உயர்குடிமக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சாதியா?, பணமா? என்று கேட்க போனால் எந்த சாதிக்காரராக இருந்தாலும் பணம் தான் அவர்களது முதல் தேர்வாக இருக்கும். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இடதுசாரிகள் தவிர தமிழகத்தை ஆண்ட கட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் சாதிப்பின்னணி கொண்ட வேட்பாளர்களையும், நிர்வாகிகளையும் நம்பி பிழைப்பை ஓட்டி ஆட்சிக்கு வந்துவிட்டன. ஆட்சியே நமது சாதி ஆதிக்கத்தால் நடக்கிறது என்று இந்த சாதியக்கட்சி அரசியல்வாதிகளும், நிர்வாகிகளும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அரசியல்பலத்தால் தங்களுக்கு கிடைக்கும் சுகபோகமான வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள இவர்கள் எல்லாவகையிலும் முயற்சிக்கிறார்கள். இதன் ஒரு பகுதிதான் சாதிய மாநாடுகள், சாதிய ஊர்வலங்கள் என்று களைகட்டுகிறது.

ஒரு சாதியில் இருக்கும் குறிப்பிட்ட நபரின் குடும்பத்தை வாழவைக்கும் அந்த நபருக்கான வேலையை தருபவர் நிச்சயமாக ஏதோ ஒரு சாதியை சேர்ந்த முதலாளியாக இருப்பார். எதார்த்தம் இது தான். ஆனால் சாதி என்ற மாயையால் இவர்கள் சாதியவாதிகளின் பிடியில் கட்டுண்டு கிடக்கிறார்கள். வேதனையான விடயம்.

தாழ்த்தப்பட்ட சாதி முதல் மேல் சாதி வரை தற்போது குழுவாக அணி திரள்கின்ற நிலை ஏற்பட்டு அவை அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் கடந்த சில காலங்களாக உருவாகியுள்ளது. ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் விடுதலைக்கு ஒட்டு மொத்தமாக போராடிய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், பாரதி உள்பட, சாதிவிடுத்து ஈழத்திற்காக போராடிய விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வரை அனைவரையும் சாதிக்குள் அடைக்க ஒரு கும்பல் பகீரத பிரயத்தனம் செய்கிறது.

தலித் மக்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் டாக்டர்.கிருஷ்ணசாமி 1996 ல் நடைபெற்ற தமிழக தேர்தலில் சர்வதேச ஆயுத தரகர் சந்திரசாமிக்கு நெருக்கமானவரும், உயர்குடி பார்ப்பனருமான டாக்டர்.சுப்பிரமணியசாமியுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டு வைத்து செயல்பட்டதை எந்த கோணத்தில் எடுத்துக் கொள்வது? இவை எல்லாம் ஏன் நடக்கிறது? யாருடைய லாபத்திற்காக இவை எல்லாம் அணி திரட்டப்படுகின்றன? என்பது தான் நம் முன் நிற்கும் கேள்வி.

தென்மாவட்டங்களில் நடந்த பெரிய சாதிக்கலவரங்களையும், அவற்றின் சமுதாய பின்னணியையும், இனி ஒரு நேர்மையான அரசு என்ன மாதிரியான உத்திகளை கையாண்டால் சாதிய ஏமாற்றுக்காரர்களிடமிருந்து அப்பாவி பொதுமக்களை பாதுகாத்து அவர்களையும் சமூகத்தின் உயர்வாழ்வு நிலைக்கு செல்ல வழிகாட்ட முடியும் என்பதையும் பார்க்கலாம்.

சாதியத்தின் ஆணி வேர் கிளம்பிய விதம்:
பெண்மைக்கே பெரிதும் முக்கியத்துவம் தரப்பட்ட தமிழ்ச்சமுதாயத்தமும் ஒருகட்டத்தில் நிலப்பிரபுத்துவத்தில் நுழைந்தது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் விவசாய உற்பத்தியை, கிராமச்சமுதாய வாழ்வை தொடர்வதற்கு செய்யும் தொழிலைக் கொண்டு மானிட அமைப்பில் முதல் பிரிவினை உருவாக்கப்பட்டது. கொல்லர், தச்சர், வண்ணார், அம்பட்டர், குயவர், சாணார்(நாடார்), பள்ளர்(தேவேந்திர குல வேளாளர்), பறையர்(ஆதிதிராவிடர்), சக்கிலியர்(அருந்ததியர்) போன்ற சாதிப்பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டன. இவை தவிர மேல்மட்ட சாதிகள் நிலவுடைமையை வைத்திருந்த சாதிகளாகவே பெரும்பாலும் இருந்தன. விவசாயிகளின் நிலவுடைமையை பொறுத்து பிற சேவை சாதிகளுக்கு சேவைக்கு தகுந்தபடி தானியமும், சில சாதிகளுக்கு தானியத்துடன் உணவும் நிலவுடமையை கொண்டிருந்த மேல்சாதியினரால் வழங்கப்பட்டன.

பிறகு ஐரோப்பியர் வருகையை அடுத்து, விவசாய விளைபொருட்களில் சந்தைப்பொருளாதாரம் உருவானது. இயந்திர தொழில் உற்பத்தி என்ற அடுத்தகட்டத்திற்கு அது நகர்ந்தது. இதனால் மேல்சாதியினரின் பிடியில் இருந்த நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் சிதைவு ஏற்பட்டு மாற்றங்கள் நிகழ்ந்தன. சேவைச்சாதியினரில் சிலர் அதிக வருமானம் தேடி நகர்ப்புற தொழில் துறை வேலைகளை நோக்கி இடம் மாறினர். கிராம சமுதாயத்தில் அது வரை நிலவி வந்த சாதிய பிடியின் இறுக்கத்தில் தளர்வு ஏற்பட தொடங்கியது.

தாழ்த்தப்பட்டோர் நலத்திட்டங்கள், தீண்டாமை ஒழிப்பு, நிலஉச்ச வரம்பு சட்டங்கள் மற்றும் அதிகரித்த தொழில் உற்பத்தி இந்த மாற்றங்களை வேகம் பிடிக்க வைத்தது. உற்பத்தியை பெருக்கி விவசாயிகளையும், விவசாய சூழல்களையும் சீரழித்த ஏகாதிபத்திய பசுமைப்புரட்சி உற்பத்தி, விவசாயிகள் தங்கள் நிலத்தை தரிசாக போட்டு விட்டு நகர்ப்புறத்தை நோக்கி ஓட உந்தி தள்ளியது. இந்த மாற்றங்களை ஒட்டி வெகுவாக நிகழ்ந்து வந்த சாதிய இறுக்கம், சமீபகாலமாக வேறுதிசையில் மாறி அதிகரித்து வருகின்றது.

நகரமயமாக்கலில் இன்றைக்கு சாதியத்தை தாண்டி பெரும்பாலான மக்கள் கலந்து வாழும் பொதுமக்கள் வாழ்விடங்கள் பலவும் கூட குடிநீருக்கும், சுகாதாரத்திற்கும் திணறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு சாதி அமைப்புகளும் ஏதோ தாங்கள் தான் சமூகத்தின் அடிமட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தங்களை சமூகத்தின் மேல் தளத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் சொல்லிக் கொள்கின்றன. அதன் ஒரு நிகழ்வு தான் தற்போது நடக்கும் சாதிய ஊர்வலங்கள், தகராறுகள், சாதிய அரசியல்கட்சிகள், இத்யாதிகள்….

2 Responses to “சாதிகள் இல்லாமல் தமிழன் இல்லை!”

  • ஈழப்பிரியன்:

    என் அருமை உறவுகளே சாதிகளைப் பாவித்து என் அருமை செந்தமிழ் இனத்தைப் பிரிக்காதீர்கள். தமிழனை தமிழனாக வாழவிடுங்கள். தமிழனுக்கு இருப்பது ஆண் சாதி, பெண் சாதி மட்டுமே… நீங்கள் அனைவரும் பொங்கு தமிழனாய் பொங்கு தமிழனாய் ஜெனீவா பொங்கு தமிழில் பொங்கி எழுங்கள்.

    • வருசத்தில மாதம் மாறலாம் மனிசன் மதம் மாறக்கூடாது::::

      அய்யா ஈழப்பிரியன்: என்ன ராசா சொல்ல வர

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்