லிபியாவின் சிர்ட் நகர் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அந்நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி ஆதரவாளர்கள் வசம் சிர்ட் மற்றும் பானி வாலித் ஆகிய இரு நகரங்கள் மட்டும் உள்ளன.
இவற்றை மீட்பதற்கு இடைக்கால அரசு மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் இரு தரப்பு சண்டை துவங்கியது.
பானி வாலித் நகரில் சண்டை நடந்து கொண்டிருக்கும் நிலையில் சிர்ட் நகரின் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கில் இருந்து எதிர்ப்பாளர்கள் நகரின் மையப் பகுதியை நெருங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இரு தரப்பு சண்டை காரணமாக நகரில் குடிநீர், உணவு, மருத்துவம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும் எந்நேரம் எந்த வீட்டின் மீது குண்டுகள் விழும் என்பது தெரியவில்லை. இதனால் அந்நகரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார்கள், லாரிகள், ஜீப்புகள் மூலம் வெளியேறி வருகின்றனர். எல்லைப் பகுதிகளில் உள்ள சாவடிகளில் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின் அவர்கள் பிற பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
சிர்ட் நகரில் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு அடிப்படை மருத்துவ வசதிகள், ஆக்சிஜன், எரிபொருள் என எதுவுமே இல்லாததால் சிகிச்சைக்காக வந்தோர் பரிதாபமாக பலியாகும் அவலம் நிலவுகிறது.
உடனடியாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என மருத்துவமனைகளை நேரில் பார்வையிட்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.