உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
லிபியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த கடாபிக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. பொதுமக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டதால் புரட்சியாளர்களுக்கு உதவ நேட்டோ படையை மார்ச் மாதம் ஐ.நா சபை அனுப்பியது.

இந்நிலையில் கடந்த 20ம் திகதி தனது சொந்த ஊரான சிர்தேவிலிருந்து தப்பிக்க முயன்ற கடாபியை நேட்டோ உதவியுடன் புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

கடாபிக்கு மொத்தம் 8 மகன்கள். இவர்களில் 4 மகன்கள் அல்ஜீரியா அல்லது நைஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. சைப் அல் இஸ்லாம் என்பவர் கடாபியின் அரசியல் வாரிசாக கருதப்பட்டார். இவர் இன்னமும் லிபியாவில் பதுங்கி இருப்பதாகவும் மற்ற மகன்கள் போரில் பலியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

“லிபியாவுக்காக போரிடுகிறோம், லிபியாவிலேயே உயிரைவிடவும் தயார்” என சைப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது நிலையை மாற்றிக் கொண்டு தனது உறவினர் மற்றும் முன்னாள் உளவு பிரிவு அதிகாரி அப்துல்லா அல் சென்னுசி ஆகியோருடன் சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய விரும்புவதாக தேசிய இடைக்கால அரசு அதிகாரியான அப்துல் மஜித் லெக்டா கூறியுள்ளார். இதன் மூலம் கடாபியின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடாபி, சைப், சென்னுசி ஆகியோர் மீது போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தை ஏவியதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அடுத்த ஒரு வாரத்தில் நேட்டோ படையை வாபஸ் பெற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்