உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்திருமுறிகண்டியில் ஏ9 வீதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையம் ஒன்றில் சனிக்கிழமை இரவு நுழைந்த ஆயுதம் தரித்த மூன்று பேர் அடங்கிய கொள்ளைக் கோஷ்டி ஒன்று தங்க நகைகள், ரொக்கப் பணம், கைத்தொலைபேசிகள், அவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்ற கார்டுகள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

ஏ9 வீதியில் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு வடக்கே சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் திருமுறிகண்டியில் பிரதான வீதியில் அமைந்துள்ள குளிர்பான விற்பனை நிலையத்தின் பின்னால் உள்ள உரிமையாளரின் வீட்டுக்குள் இரவு ஒன்றரை மணியளவில் 3 பேர் அடங்கிய கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

கதவைத் தட்டி நித்திரையில் இருந்த வீட்டுக்காரராகிய சதாசிவம் சிவசுந்தரராஜ் என்பவரை எழுப்பி கதவைத் திறக்கச் செய்து வீட்டினுள் சென்று அவரையும் அவரது மனைவி மற்றும் வீட்டிலிருந்தவர்களையும் ரைபிள் மற்றும் கத்தி என்பவற்றைக் காட்டி சத்தம் போட வேண்டாம் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன், வீட்டுக்காரரின் மனைவி கையில் அணிந்திருந்த ஒரு சோடி காப்பு, கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி என்பவற்றையும் அபகரித்ததுடன், வீட்டின் முன்னால் ஏ9 வீதியில் அமைந்துள்ள வீட்டுக்காரருக்குச் சொந்தமான குளிர்பான நிலையத்தின் திறப்புக்களையும் எடுத்து கடையைத் திறந்து அங்கிருந்த 80 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம், இரண்டு கைத்தொலைபேசிகள், கைத்தொலைபேசிகளுக்குரிய முன்கொடுப்பனவு அட்டைகள் என்பவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவாகி யுள்ளனர்.

துணியால் முகத்தை மூடிக் கட்டியிருந்த கொள்ளையர்கள் 3 பேரில் இருவர் ரைபிள்கள் வைத்திருந்ததாகவும், மற்றவர் கத்தி வைத்திருந்ததாகவும் பொலிஸாருக்கு செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் தமிழிலும் சிங்களத்திலும் சரளமாக உரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் அரை கிலோமீற்றர் தொலைவில் இராணுவ காவலரண் ஒன்று இருப்பதாகவும், கொள்ளை நடைபெற்ற கடை மற்றும் வீட்டின் பின்பக்கமாக சுமார் 300 மீற்றர் தொலைவில் பொன்னகர் கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்ட வேலை நடைபெறுவதாகவும், அங்கு பணிபுரிபவர்கள் அங்கு தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கொள்ளையடித்ததன் பின்னர் பொன்னகர் பக்கமாகவே சென்றதாகவும் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி அறிந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ரைபிள்கள் ஏந்தி வந்து ஆயுத முனையில் நடத்தப்பட்டுள்ள இந்தக் கொள்ளைச் சம்பவத்தையடுத்து, திருமுறிகண்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்