உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஆப்ரகாம் தாமஸ் கோவூர். கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார். கல்கத்தாவில் வங்கபாசி கல்லூரியில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்தர் கோவூர், இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வுபெற்ற பின்னர் ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்;.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர். ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும் இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதிலும், அறிவியல் ரீதியாகப் பரப்புரை செய்து அவைபற்றிய நம்பிக்கைகளை மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத் துவதிலும் சலியாத தொண்டு புரிந்தவர். சில கைத்திறமைகளைக் கைக்கொண்டு மூடமக்களின் மனதில் அவற்றை அற்புதங்கள் எனத் தோன்றுமாறு, மயக்கி ஏமாற்றிப் பணமும் புகழும் பெற்ற மோசடிக்காரர்களைத் தோலுரித்தவர். கடவுள் அவதாரம் என்றும் கடவுளே என்றும் கூடப் பிரச்சாரம் செய்து பிழைத்துக் கொண்டிருப்பவர்களை விவதாத்துக்கு அழைத்துத் தோற்று ஓடும் படிச் செய்தவர். கோவூரின் தந்தை மர்தோமா சிரியன் கிறித்துவப் பிரிவின் மலபார் தேவாலயத்தில் பாதிரி. விகார் ஜெனரல் என்று அழைக்கப்படக்கூடிய உயர் நிலைப் பாதிரி. கோவூர் ஈப்பே தொம்ம கட்டனார் என்பது அவர் பெயர். அற்புதம் செய்து மதம் பரப்பிய யேசுவின் மதப் பிரச்சாரகரின் மகனாகப் பிறந்த ஆப்ரகாம் கோவூர்தான் அற்புதங்களையும் அப்படிச் செய்த மோசடிக்காரர்களையும் தோலுரித்து அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தேவ குமாரனும் எதிர்பார்த்திருக்காது; தேவ மகிமையைப் பாடிய கோவூரின் தந்தையும் எதிர்பார்த்திருக்க மாட்டார். என்ன செய்வது? அறிவின் ஆற்றல், அதிலும் பகுத்தறிவின் ஆற்றல் அப்பேற்பட்டது!பின்னர் இலங்கைக்குச் சென்று தாவரவியல் பேராசிரியராகப் பல கல்லூரிகளில் பணியாற்றினார். கடைசியாகக் கொழும்பு நகரின் தர்ஸ்டன் கல்லூரியில் பணியாற்றி 1959இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற நாத்திகரான கோரா அவர்கள் தாவரவியல் பேராசிரியராக இலங்கையில் பணிபுரிந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. அரசுப்பணி, ஆசிரியப்பணி என்ற கட்டுகள் அவிழ்ந்த நிலையில் தம் முழு ஆற்றலையும் நேரத்தையும் உழைப்பையும் பகுத்தறிவுப் பணிப் பிரச்சாரத்திற்கு அளித்தார் கோவூர். 1960இல் இலங்கை பகுத்தறிவாளர் கழகத்தை அமைத்தார். அதன் தலைவராக அவரே தெரிந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார். 1978இல் அவர் இறக்கும்வரை அப்பொறுப்பில் அவரே தொடர்ந்து உழைத்தார்.
1961ஆம் ஆண்டில் அய்ரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து அந்நாடுகளின் பகுத்தறிவாளர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். தாராள சிந்தனையாளர்கள் (FREE THINKERS)” என்ற பெயரில் இருந்த பகுத்தறிவாளர்கள் அவர்கள். இலங்கைப் பகுத்தறிவாளர் தூதன் எனும் பெயரிலான ஏடு ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து பரப்புரை செய்து எழுதி வந்தார். நார்சிசஸ் எனும் புனைப்பெயரில் நிறையக் கட்டுரைகளைச் சிலகாலம் எழுதி வந்தவர், பின்னர் சொந்தப் பெயரிலேயே எழுதத் தொடங்கினார். அக்கட்டுரை கள் முதலில் மலையாள மொழியில் மொழிபெ யர்த்து வெளியிடப்பட்டு, பின்னர் இந்திய மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரப்பப்பட்டன.
கடவுள், பேய்கள், ஆவிகள் எனும் தலைப்பில் அவரது நூல் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தபோது, அவசர அவசரமாக அதற்குத் தடை விதித்தவர் பிரகாஷ் சிங் பாதல் எனும் சிரோமனி அகாலி தளம் எனும் சீக்கிய மதவாதக் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த செயல் இது. கிறித்துவ மதத்தை விமர்சித்து, அதன் ஆவி நம்பிக்கைகளைக் கண்டித்து, கடவுள், பிசாசு பற்றிய பொய்மைகளை அம்பலப்படுத்தி நூற்றுக்கணக்கான நூல்கள் வந்து கொண்டிருக் கின்றன. அந்த மதத்தைச் சார்ந்த ஆளுவோர் அவற்றைத் தடைப்படுத்துவது கிடையாது. அண்மையில் டாவின்சி கோட் எனும் நூலுக்கு எதிர்ப்பு மதவாதிகளால் கிளப்பப்பட்ட போதும் அரசுகள் அதனை ஏற்கவில்லை
கிறித்துவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்கள். மனிதர்கள் தவறு பாவம் செய்யக்கூடாது. நல்லவற்றையே செய்திட வேண்டும். தீயவற்றைச் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். தவறை உணர்ந்து பாவமன்னிப்புக் கோரலாம்; அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும் என்று மக்களை ஏமாற்றிக் கொள்ளை அடித்தது கத்தோலிக்க மதபீடம். அது தற்போது இல்லை. அந்தத் தண்டனையை கர்த்தர் வழங்கும் நாள் இறுதித் தீர்ப்பு நாள் என்பதும், அந்த நாள் வரை மனிதர்கள் இறந்துபோனாலும் உடல் வைக்கப்பட்டி ருக்க வேண்டும்; பிணங்களை எழுப்பி, விசாரித்து, தீர்ப்பு வழங்கப்படும் என்பதற்காக பிணங்கள் புதைக்கப்பட வேண்டும் என்பது கிறித்துவ மதக்கட்டளை. அந்த மதத்தில் பிறந்துவிட்டார் என்றாலும்கூட, ஆப்ரகாம் கோவூர் மதக் கருத்துகளுக்கு மதிப்புத் தருபவர் அல்லர்; மதபீடத்தின் முன் மண்டியிடக் கூடாது என்றவர் ஆதலால் இறப்புக்குப் பின் தம் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று உயில் எழுதி வைத்தவர். தம் கண்களைக் கொடையாகத் தந்துவிட வேண்டும் என்றும் உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக அளித்துவிட வேண்டும் என்றும், தம் உடல் எலும்புக்கூடு தாம் கடைசியாகப் பணியாற்றிய தர்ஸ்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தம் இறுதி விருப்ப ஆவணத்தில் எழுதியிருந்தார். அவ்வாறே அவை நிறைவேற்றப்பட்டன.

1963ஆம் ஆண்டில் ஆப்ரகாம் கோவூர் பதிவு செய்த ஆவணத்தின் மூலம் கடவுள், பேய், பிசாசு, ஆவி நம்பிக்கைக்காரர்களுக்கு விடுத்த அறைகூவல் உலகப் பிரசித்தி பெற்றது. அவரது சவாலை ஏற்று நிரூபிப்பவர்களுக்கு ஒரு லட்சம் இலங்கை ரூபாய் பரிசு அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். 23 செயல்களைப் பட்டியலிட்டு அவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்து காட்டுபவர் யாராக எந்த நாட்டில் இருந்தாலும் பரிசுத் தொகை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். ஒருவரும் முன்வரவில்லை. அவர் இருந்தவரையும் வரவில்லை. இறந்த பின்னரும் வரவில்லை. அவர் விதித்த 23 செயல்கள் இவைதாம்:
ஒட்டப்பட்ட சுவரில் வைக்கப்பட்ட ரூபாய் நோட்டின் வரிசை எண் சொல்லப்பட வேண்டும்.
ரூபாய் நோட்டின் நகலை வரவழைத்துக் காட்டல்.
எரியும் நிலக்கரித் தணலின்மீது அரைநிமிடம் காலை ஆட்டாமல் அசைக்காமல் நிற்றல்.
தான்கூறும் பொருளை வெறும் கையில் வரச்செய்தல் (விபூதி வரவழைப்பதுபோல்)
கனத்த பொருளை அசைத்தல்/வளைத்தல்
அடுத்தவர் மனதில் நினைப்பதைக் கூறல்
துண்டிக்கப்பட்ட கையை, பிரார்த்தனை மூலம் ஓர் அங்குலமாவது வளரச் செய்தல்.
யோகசக்தி மூலம் அந்தரத்தில் பறந்து காட்டல்.
யோகசக்தி மூலம் இதயத்துடிப்பை 5 நிமிடங்கள் நிறுத்தி வைத்தல்.
நீரின் மேல் நடத்தல் (ஹடயோகம்)
உடலை ஓரிடத்தில் விட்டுவிட்டு, மற்றோர் இடத்தில் தோன்றுதல் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் கூறல்
ஆழ்நிலைத் தியானம் மூலம் அல்லது யோக தியானம் மூலம் உள்ளொளி எழுப்புதல்.
தெரியாத மொழியில் பேசுதல்/புரிந்துகொள்ளல் (முற்பிறவியில் பேசிய அன்னிய மொழியில்) பிசாசு, ஆவியை ஒளிப்படம் எடுக்க வாய்ப்பாகத் தோன்றச் செய்தல்.
ஒளிப்படம் எடுத்தபின் நெகடிவ்விலிருந்து உருவை அழித்தல்
பூட்டப்பட்ட அறையிலிருந்து வெளிவருதல்
தெய்வீக சக்தியின் மூலம் ஒரு பொருளின் எடையைக் கூடச் செய்தல்.
மறைக்கப்பட்ட பொருளைக் கண்டுபிடித்தல்.
நீரை பெட்ரோலாக அல்லது ஒயினாக மாற்றல்.
ஒயினை இரத்தமாக மாற்றுதல்
பத்துப்பேரின் ஜாதகம், கைரேகை ஆகியவற்றில் இருந்து அவரவர் பிறந்த நாள், நேரம் ஆகியவற்றைக் கூற, சரியான ஜாதகத்தை, கைரேகையை எடுத்துக் காட்ட வேண்டும்.
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா, பன்றிமலை சாமி, நீலகண்ட தாதா, நிர்மலா தேவி, சிறீவஸ்தவா, பூஜ்யதாதா, டட்டாபால், திரிப்ரயர் ரோகினி, கிட்டுதேவ் ஆனந்தமூர்த்தி, காமுபாய், சின்மயானந்த், ரஜ்னீஷ், முக்தானந்த், சுவாமி ராமா, சுவாமி அரிதாஸ், சிவபாலயோகி, பகவான் ஞானானந்தா, குருமகராஜ், மகேஷ் யோகி, ஹசரத் அலி, டாக்டர் வடலைமுடி, தீர்த்தங்கரர், ஆர்.பி.திவாரி, ஊரிகெல்லர், கெலிய மிச்சைலோவா, ஜீன் டிக்சன், சிபில் வீக் போன்ற மோசடிக்காரர்களுக்குச் சவால் அனுப்பினார். எல்லா மதத்தவர்களும் இதில் அடக்கம். கீழை மேலை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுப்பினார். ஒருவரும் சவாலை ஏற்கவில்லை. என்னே அற்புதங்கள்? என்ன மகரிஷிகள்? என்ன பிரம்ம ரிஷிகள்? என்ன ஆசார்யர்கள்? என்ன குருதேவர்கள்? என்ன ரெவரன்ட்கள்? என்ன வரசரத்கள்? எல்லாமே போலி! எல்லாமே ஹம்பக்!
ஒரே ஒரு நபர் ரூ.1,000/-_ முன்தொகை கட்டி அறைகூவலை ஏற்க முன்வந்தார். பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் ஜி.வெங்கடராவ் என்பவர் தன் குரு ராகவேந்திர சாமி தெய்வீக சக்தி பெற்றவர் எனக் கூறிக்கொண்டு வந்தார். ஓம் ராகவேந்திர சரணம் என்று நாள் ஒன்றுக்கு 100 தடவை கூறிவந்தால் தெய்வீக சக்தியைப் பெறலாம் எனக் கூறினார். ஆனால், அறைகூவலில் கண்டுள்ள 23 செயல்களில் ஒன்றையும் தம்மால் செய்ய முடியாது எனக் கூறிவிட்டார்

One Response to “பகுத்தறிவாளர் ஆப்ரகாம் தாமஸ் கோவூர்!”

 • நா.சிவாஸ்:

  காலியை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவருக்கு அவருடைய முற்பிறப்பு ஞாபகத்தில் உள்ளது.

  சிறுவனின் பெயர் மஞ்சுள.

  கடந்த பிறப்பில் உடுகம கிராமத்தில் உதய கெலிம் என்கிற பெயரில் வாழ்ந்து இருக்கின்றார் என்று கூறுகின்றார் சிறுவன்.

  உதய கெலிம் குறித்து சிறுவன் கூறுகின்ற தகவல்கள் அனைத்தும் நூறு சதவீதம் சரியாக உள்ளன.

  உதய கெலிம் என்பவர் மீன் வியாபாரி. செல்வந்தர். வாகனங்கள் பலவற்றை வைத்து இருந்திருக்கின்றார். சுமார் 11 வருடங்களுக்கு முன் வாகன விபத்து ஒன்றில் 35 வயதில் இறந்து போனார்.

  சிறுவனின் கிராமம் உதய கெலிமின் கிராமத்துக்கு அருகில்தான் உள்ளது.

  சிறுவன் முற்பிறப்பை நினைவு கூர்ந்து சம்பவங்களை சொல்லி வந்து இருக்கின்றார்.

  பத்து மாத குழந்தையாக இருந்தபோது இச்சிறுவனுக்கு விளையாட்டு கார்கள் மீது அதிக நாட்டம் காணப்பட்டு இருக்கின்றது.

  தனிமையில் இருக்கின்றபோது கடந்த பிறப்பைப் பற்றி சுயம் பேசி வந்திருக்கின்றது குழந்தை.

  சிறிய வயது தொட்டு உடுகம கிராமத்தை பற்றியும் சுது நோனா என்பவரை பற்றியும் தரிந்து, ஹிமாலி என்பவர்கள் பற்றியும் சிறுவன் சொல்லி வந்திருக்கின்றார். கொழும்பு வாழ்க்கை பற்றி சொல்லி இருக்கின்றார்.உதய கெலிம் போல புகைப் பிடித்து நடித்துக் காண்பித்து இருக்கின்றார். இவரால் நன்றாக பாட முடிகின்றது. வாகன உதிரிப் பாகங்களை மிக இலேசாக அடையாளம் காண்கின்றார்.

  ஒரு முறை சிறுவனை பெற்றோர் காலி வெளிச்ச வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆயினும் ஏற்கனவே இவ்வெளிச்ச வீட்டுக்கு வந்து பரிச்சயமானவர் போல நடந்து கொண்டார். இவர் இவ்வெளிச்ச வீட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் அக்குவேறு ஆணி வேறாக அறிந்து வைத்திருக்கின்றார்.

  உதய கெலிம் குறித்து அறிய முற்பட்டனர் சிறுவனின் பெற்றோர். பொலிஸில் சென்று விசாரித்தனர். சிறுவன் சொல்லி வந்தபடி 2001 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் திகதி வாகன விபத்து ஒன்று இடம்பெற்று உதய கெலிம் என்பவர் இறந்துதான் இருக்கின்றார் என்பதை பொலிஸ் ஆவணங்கள் உறுதிப்படுத்தின. உதய கெலிமினின் வீட்டை சிறுவனின் பெற்றோர் கண்டுபிடித்தனர். உதய கெலிமின் வீட்டுக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு சிறுவன் குறித்து தகவல் வழங்கப்பட்டது.

  உதய கெலிமின் வீட்டுக்கு சிறுவனை பெற்றோர் அழைத்து வந்தனர். ஏற்கனவே வீட்டுக்கு வந்து பரிச்சயமானவர் போல நடந்து கொண்டார். கால இடைவெளியில் வீட்டில் ஏற்பட்டு இருக்கக் கூடிய மாற்றங்களை அப்படியே சொன்னார். உதய கெலிமினின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை மிக துல்லியமாக அடையாளம் காட்டினார். கடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

  உதய கெலிமின் மறுபிறப்புத்தான் இச்சிறுவன் என்பதை உதய கெலிமின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்