தமிழில் எழுத
பிரிவுகள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையால் 19,502 குடும்பங்களைச் சேர்ந்த 72,603 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமைவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 6,900 குடும்பங்களைச் சேர்ந்த 24,026 பேரும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 6,248 குடும்பங்களைச் சேர்ந்த 27,123 பேரும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 6,354 குடும்பங்களைச் சேர்ந்த 21,454 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தந்தப் பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை, பதுரியா நகர், மாஞ்சோலை ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகளிலுள்ள 57 குடும்பங்களைச் சேர்ந்த 167 பேர் பதுரியா நகர் அல்மினா வித்தியாலயத்திலும் மாஞ்சோலை அல்ஹிறா வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் கூறினார்.

இதேவேளை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 557 குடும்பங்களைச் சேர்ந்த 2,289 பேர் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.

மேலும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அனைத்துக் கிராம அலுவலகர் பிரிவுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகளிலுள்ள 382 குடும்பங்களைச் சேர்ந்த 1,285 பேர் 5 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1,932 குடும்பங்களைச் சேர்ந்த 6,260 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதுடன், சுகாதார வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கூறினார்.

இதேவேளை, ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்டின் தலைமையில் பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் உறுப்பினர்கள் வெள்ளநீர் வழிந்தோடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்