சீனாவின் தென்மேற்கில் சிசூயான் மாகாணத்திலுள்ள யான் நகர் அருகே ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானதால் அப்பகுதியில் சுமார் 20 வினாடிகளுக்கு மேல் பூமி குலுங்கியுள்ளது.
இதனால் வீடுகளில் இருந்த மக்கள் பீதியும், அதிர்ச்சியும் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரங்களில் தஞ்சம் புகுந்தனர்.
இதற்கிடையே, நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தும் 100 பேர் பலியாகியானத்துடன் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி கிடக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தற்பொழுது நடந்து வருகின்றது.
லூஷான் நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 13 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. யான் நகரம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது.
மேலும் சிசூயான் மாகாண தலைநகரான செங்டுவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இந்த நகரம் யான் நகரில் இருந்து சுமார் 140 கி. மீற்றர் தூரத்தில் உள்ளது. அதே போன்று லூஷான் மற்றும் போயஸிங் நகரிலும் நிலநடுக்கம் உருவானது. அங்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டும் இதே சிசூயான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது