தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


untitledயாழ். வலிகாமம் வடக்கின் காணி பிரச்சினைகள் தொடர்பில் இரண்டாயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இராணுவத்தினர் பிரச்சினைக்குரிய காணியில் வீடுகளை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு எதிராக வழங்கு தாக்கல் செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

காணி பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் முன் இருக்கும் நிபந்தனைகளை மாற்ற முயற்சிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என சங்கத்தில் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் குணரட்ன வன்னிநாயக்க தெரிவித்தார்.

வலிகாமம் காணி வழக்கு தொடர்பான மனுவைக்களை நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் போது நீதிமன்றத்திற்கு எதிராக இராணுவம் நடந்துள்ளமைக்கான ஊடக அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

அதேவேளை வலிகாமம் காணி உரிமையாளர்கள் தமது காணி உரிமைகள் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், அந்த காணியில் ஒரு பகுதியில் இருக்கும் வீடுகளை கடந்த வாரம் இராணுவம் இடித்து தரைமட்டமாக்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியையும் மீறி இராணுவத்தினர் சர்ச்சைக்குரிய நிலத்தில் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகளை தொடர்வதாக யாழ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் மேற்படி காணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சட்டரீதியாக சுவிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் காணி உரிமையாளர்கள் அதற்கு சவாலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சில காணி உரிமையாளர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் என தெரிவித்தது.

வலிகாமம் காணி விவகாரம் தொடர்பான விடயத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரிய தெரிவித்தார்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் அஸ்ரப் நகரில் உள்ள முஸ்லிம்களின் காணிகளை இராணுவம் சுவிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிராக நீதிமன்றத்தில் முனைப்புகளை மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராக இருந்தும் முஸ்லிம் காணி உரிமையாளர்களின் காணிகளை திரும்ப பெறமுடியாத கடினமான நிலைமை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்