உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நிபந்தனையற்ற பேச்சுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தயார் என்றால் நாங்களும் ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று ஒரு மித்த குரலில் தெரிவித்தனர்.சர்வதேச தலையீட்டை நாம் கோரவில்லை. பதவிக்கு வந்த அரசுகளே எம்மைச் சர்வதேசத்தை நோக்கித் தள்ளிவிட்டன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக இல்லை. இந்த நிலையில் நாம் என்ன செய்யமுடியும்? என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் இ.அங்கஜனின் உரைக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.வடக்கு மாகாண சபை அமர்வு நேற்று ஆரம்பமானபோது எதிர்க்கட்சி உறுப்பினர் அங் கஜன் இராமநாதன், அவைத் தலைவரின் அனுமதியுடன் உரையாற்றினார்.அங்கஜன் இராமநாதன் தனது உரையில்,எமது உள்நாட்டு விவகாரங்களைச் சர்வதேச மயப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டிலுள்ள எவரும் நன்மையடையப் போவதில்லை. நாம் இளைஞர்களுடன் பேசி, இளைஞர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மனங்களில் உள்ளவற்றுக்குச் செவிசாய்க்க வேண்டும். அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இன்று இலங்கையிலுள்ள எதிர்கால இளைஞர்கள் விரும்புவது ஒன்றும் நடக்கவில்லை.ஒரு தீர்வைக் காண்பதற்குத் திறந்த மனதுடன் பேச விரும்பும் ஜனாதிபதி எமக்கு இருக்கின்றார். வேறு விதமான பாதையில் போய்க் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் உங்கள் செயற்பாடுகளையும் மீள பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.இதனையடுத்து அங்கஜனின் உரைக்குப் பதலளிக்கும் வகையில் வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தனது உரையில்,சர்வதேசத்தை நோக்கி நாம் செல்லவில்லை. கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வை நல்லெண்ணத்துடனே நான் சென்று சந்தித்தேன்.அதன்போது அவர் சிரித்துக் கதைத்தார். பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கினார். ஆனால் எதனையும் நிறைவேற்றவில்லையே?. இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள்?” என்று கேள்வியெழுப்பினார்.அவரைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிபந்தனையற்ற பேச்சுக்கு ஜனாதிபதி தயார் எனில் நாங்களும் எங்கள் கட்சித் தலைமையும் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்ற விடயம் உட்பட எந்தவொரு முன்நிபந்தனையும் ஜனாதிபதி விதிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டார்.அதன் பின்னர் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தனது உரையில்,இலங்கையின் 8 மாகாண சபைகளுக்கும் ஒரு சட்டம். வடக்கு மாகாணசபைக்கு மட்டும் இன்னொரு சட்டம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சை நிறுத்தியது நாங்களல்ல. சர்வதேசம் எங்கள் பிரச்சினையைப் புரிந்து கொண்டது என்பதுதான் உண்மை.” என்று கூறினார்.தொடர்ந்து வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான க.சிவமோகன், க.சர்வேஸ்வரன், இ.ஆனல்ட், பிறிமுஸ் சிராய்வா, கஜதீபன் ஆகியோரும் உரையாற்றினர்க.சிவமோகன் இது குறித்துக் கூறுகையில் “சர்வதேச தலையீடற்ற பேச்சு மூலம் தீர்வு கிடைக்காது” என்றார். க.சர்வேஸ்வரன் கூறுகையில், “எமது பிரச்சினை 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே சர்வதேச மயப்படுத்தப்பட்டு விட்டது. வட்டமேசை மாநாடு, நிபுணத்துவக் குழு என்று எல்லாத் தீர்மானங்களும் குப்பைக்குள் போடப்பட்டுள்ளன. ஜனாதிபதியே தமிழ் மக்களின் உறுதிக் காணிகளை வேறு யாருக்கோ மாற்றி வழங்கும்போது நாம் யாரிடம் சென்று முறையிட முடியும்?” என்று கேள்வியயழுப்பினார். தந்தை செல்வாவின் காலத்தில் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டபோது நாம் சர்வதேசத்தை நாடிச் செல்லவில்லையே. நாங்கள் தற்போது நிராயுதபாணிகளாக நிற்கின்றோம்” என்று கூறினார் இ.ஆனல்ட்.பிறிமுஸ் சிராய்வா கருத்துத் தெரிவிக்கும்போது, “அங்கஜனின் உரையில் மறைமுக நிகழ்சித் திட்டம் இருக்கின்றதோ தெரியவில்லை. அவர் உரையாற்றிய சந்தர்ப்பம் அவ்வாறு எண்ணத் தோன்றுகின்றது. முதலில் எங்கள் வடக்கு மாகாணசபையைச் சுதந்திரமாகச் செயற்பட விடுமாறு உங்கள் தலைவரிடம் கூறுங்கள்” என்று தெரிவித்தார்.அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த கஜதீபன், அங்கஜனின் உரையை கன்சாட்டிலிருந்தே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனினும் அவைத் தலைவர் அதற்கு மறுத்துவிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்