உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


imagesOE4QN4CWபோர்குற்ற விசாரணைகளை ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமே ஒப்படைக்கும் உத்தேச தீர்மானத்தை அமெரிக்கா இன்று ஜெனீவாவிவ் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 அமர்வில் சமர்ப்பித்துள்ளது. இந்தப் பிரேரணையில் இதற்கு முன்னர் கூறப்பட்ட சர்வதேச பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றம் என்ற பதமும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா குறித்த ஐ.நா விசாரணை அறிக்கையை வரவேற்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை குறித்த உத்தேச தீர்மானத்தில் ஐ.நா விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் புதிதாக பந்தியொன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30 அமர்வு ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய கூட்டத்தொடரின் போது அனைவரினாலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, மெசிடோனியா ஆகிய நாடுகளின் இணைத் தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த பிரேரணையில் முன்னதாக சர்வதேச பங்களிப்புடனான கலப்பு நீதிமன்ற விசாரணை பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் சிறிலங்கா அரசும், அதன் நட்பு நாடுகளான சீனா, ரஷயா, கியூபா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்பை அடுத்து இன்றைய தினம் அமெரிக்காவல் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் கலப்பு நீதிமன்றம் என்ற பதம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கமே விசேட நீதிமன்ற பொறிமுறையை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பொதுநலவாய நாடுகளினதும், ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், அனுமதி அளிக்கப்பட்ட வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பிலும் இந்த விசாரணை நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பிரேரணையின் பல இடங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வரவேற்றுள்ளதுடன், சிறிலங்கா அரசாங்கத்திற்கு தனது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தேவையான முழமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்காவின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் தீர்மானம் அமையும் என்று கடந்த மாதம் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் உறுதியளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்