தமிழில் எழுத
பிரிவுகள்


Oct182010_1ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானத்தை விரைவாக அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜெனீவா தீர்மானம் தொடர்பான இரண்டாம் நாள் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நட்டஈட்டினை வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தேசிய பிரச்சினைக்கு மிக விரைவான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அனைத்து தரப்பினரும் தெரிவித்து இணக்கப்பாட்டுக்கும் வந்துள்ளனர். இத்தகைய முன்னேற்றகரமான விடயங்கள்தொடர்பான எமது நன்றியறிதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை மீதான தீர்மானங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் முட்டாள்தனமான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன. எனினும் இன்றைய அரசாங்கத்தின் அணுகுமுறைகள் வரவேற்கத்தக்கவையாக இருக்கின்றன.

எனவே ஜெனீவா தீர்மானம் விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டும். உண்மைகள் கண்டறியப்படுதல் வேண்டும். மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை உருவாகிவிடாதிரப்பதற்கான நிலையான உறுதிப்பாடும் வழங்கப்பட வேண்டும்.

2012, 2013, 2014ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் வரிசையிலேயே தற்போதைய தீர்மானமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் இணங்கப்பட்டுடன் தீர்மானம் அமைந்துள்ளது.

முன்னைய காலப்பகுதிகளில் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதற்கும் அதனை ஆராய்வதற்கும் கூட முன்னைய அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. மாறாக ஐக்கிய நாடுகளினதும் ஜெனீவா பேரவையினதும் அறிவுறுத்தல்களை எதிர்த்தும் அவற்றை நிராகரித்தும் சர்வதேச நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டுமே முன்னைய அரசாங்கம் செயற்பட்டது. அன்றைய காலகட்டத்தில் அதன் செயற்பாடுகள் முட்டாள்தனமாகவும் அதே­நேரம் தான்தோன்றித் தனமானதாகவுமே அமைந்திருந்தன.

முன்னைய அரசாங்கம் பொறுப்புக்களை கூறுவதற்கும் அழுத்தங்களை குறைத்துக் கொள்வதற்குமான அநேக சந்தர்ப்பங்களை தவிர்த்து நிராகரித்து வந்தமை தெளிவான விடயமாகும். இதன் காரணங்களால் சர்வதேசத்தின் நம்பிக்கை இழக்கப்பட்டது. அந்த வரிசையில் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தனது சர்வாதிகாரப் போக்கினையும் வெளிக்காட்டியிருந்தது. அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பரந்தளவில் இல்லாது குறுகிய சிந்தனைகளில் செயற்பட்டிருந்தது. இதனாலேயே பின்னாளில் இலங்கையின் இறைமைக்கே அச்சுறுத்தலும் உருவானது, சர்வதேசம் இலங்கைக்கு எதிராகத் திரும்பத் தொடங்கியது.

எனினும் 2015 மார்ச்சில் இத்தீர்மானம் ஜெனீவாவில் கொண்டுவரப்படவிருந்த சமயத்தில் புதிய அரசாங்கத்தின் அணுகுமுறையில் அது செப்டெம்பர் வரையில் பின்னோக்கி நகர்த்தப்பட்டிருந்தது. அத்துடன் இவ்விடயத்துக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் புதிய அரசாங்கம் உறுதியளித்திருந்ததின் பேரில் தற்போது இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜெனீவா தீர்மானம் வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் பொருட்டே தேசிய அரசாங்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இன்றைய இலங்கை அரசாங்கமானது சர்வதேச குழுமத்தின் நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை நாடானது சர்வதேசத்திடமிருந்து தள்ளி­வைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதையே நாமும் விரும்புகிறோம்

மேலும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதுடன் பல்வேறு தேவைப்பாடுகள், அடைதல்களுக்குரிய விடயங்கள் இருக்கின்றன. மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நாம் இன்னும் நீண்ட தூரத்துக்கு பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது பயணம் நீண்டிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி தேசிய பிரச்சினைக்கு விரைவான தீர்வொன்றையும் பெற்றுக்கொடுப்பதில் சர்வகட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதும் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய நிலைமைகளுக்காக எமது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாம் ஒரு போதும் பிரிவினைவாதத்தை விரும்பியவர்கள் அல்லர். அதனை நாம் எப்போதும் எதிர்த்துள்ளோம். அதனால் தான் 1970 களில் இடம்பெற்ற தேர்தல்களில் நவரட்ணம் போன்றோர் தோல்வியடைந்து கடடுப்பணத்தையும் இழக்க நேரிட்டது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

தமிழீழம், புலிகள் என்ற வாதங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாமையே ஆகும். எனவே மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகிவிடக்கூடாது – என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்