உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.தமது விடுதலை தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான பதிலை ஜனாதிபதி எமக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம். இதுதான் எமக்கு இறுதியாக எஞ்சியுள்ள ஒரே வழி. எமது சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு.

இறந்த பின்னர் எமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கின்றோம் என தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாக அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடந்த 12ஆம் திகதி ஆரம்பித்த இவர்களது போராட்டம் 17ஆம் திகதி வரையில் நீடித்திருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக எழுத்துமூலமாக உத்தரவாதமளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர்.

அத்துடன், “ஜனாதிபதியை நான் நம்புகின்றேன். நீங்கள் அவர் வழங்கிய வாக்குறுதியை என்னை நம்பி கைவிடுங்கள்” என்று தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்திருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், நவம்பர் 7ஆம் திகதி நெருங்குகின்ற நிலையில் தமது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி மௌனமாக இருக்கின்றார். எம்மை பிணையில் விடுவது தொடர்பில் பேச்சுகள் இடம்பெறுகின்றன. நாம் கோருவது பொதுமன்னிப்பைத்தான். பிணையில் விடுதலைசெய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமக்குப் பொதுமன்னிப்புத்தான் வேண்டும்” என்று தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன்இ நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படாவிட்டால், சாவதைத் தவிர வேறு வழியில்லை. நாம் எமது உடலை மருத்துவ பீடத்துக்கும், எமது உடல் உறுப்புகளை ஏனையோருக்கும் தானம் எழுதி வைத்து விட்டுத்தான் சாவோம். நாம் இறந்த பின்னர் எமது உடலையும், உடல் உறுப்புகளையும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபாலவே ஏற்றுக்கொள்ளட்டும்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீபாவளிப் பண்டிகையை தாம் புறக்கணிப்பதாக அறிவிப்பதோடு, ஒட்டுமொத்த தமிழ் இந்து மக்களையும் புறக்கணிக்கக் கோரவேண்டும். அத்துடன், நாடாளுமன்றத்துக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களது ஆதங்களை, அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊடாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்