தமிழில் எழுத
பிரிவுகள்


untitledதிருகோணமலை சிறிலங்கா கடற்படை தளத்தில், இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றைத் தாம் பார்வையிட்டதாகவும், அது தமது பயணத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு எனவும், பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு தெரிவித்துள்ளது.

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் துணைத் தலைவர் பேனாட் டுகைம் தலைமையில், டு உங் பெய்க், ஏரியல் டுலிற்ஸ்கி ஆகியோரரைக் கொண்ட குழு கடந்த 9ஆம் நாள் தொடக்கம், நேற்று வரை சிறிலங்காவில் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வுகளையும், சந்திப்புகளையும் மேற்கொண்ட பின்னர், தமது பயணத்தின் முடிவில், நேற்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

இதன் போது கருத்து “திருகோணமலை சிறிலங்கா கடற்படை தளத்தில், நிலத்தடி இரகசிய தடுப்பு முகாமில் பெரும் எண்ணிக்கையானோர் நீண்டகாலம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டிருக்கலாம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இது உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

பல உயிர்கள் இழந்திருக்க கூடும் என நம்பப்படும் வகையில் மிகவும் பாரதூரமான விசாரணைகள் இங்கு நடைபெற்றிருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம்.

இந்த நிலத்தடி இரகசிய தடுப்பு முகாம்களில் சித்திரவதை இடம்பெற்றிருக்குமா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ள போதும் இவை அதிகாரபூர்வ தடுப்பு முகாமொன்று அமைய வேண்டிய முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

un-misssing-team

காணாமற்போகச் செய்யப்படுவது அனைத்துலகச் சட்டத்தின்படி குற்றச்செயலாகும். தரக்குறைவான இரகசிய முகாமொன்றில் தடுத்து வைக்கப்படுவது மனித உரிமை மீறலாகும்.

எமது பயணத்தின் ஒரு பாரிய கண்டுபிடிப்பாகவே இந்த நிலத்தடி இரகசிய தடுப்பு முகாமை கருதுகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாகவே எம்மால் இந்த முகாமை சென்றடைய முடிந்தது.

குற்றப்புலனாய்வு அதிகாரியொருவர் எம்மை அங்கு அழைத்துச் சென்று விசாரணைகள் நடத்தப்பட்ட இடங்களை காண்பித்தார்.

அந்த இரகசிய தடுப்பு முகாமின் சுவர்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களால் கூடுதலாக எழுதப்பட்டிருந்தன.

அங்கே “20107025” என்ற இலக்கத்தை நாம் கண்டோம். இது 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் நாளை குறிக்குமென நாம் நம்புகின்றோம்.

கடற்படை தளத்தின் நிலத்துக்கு கீழாகவே இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதனுள் செல்வதற்கான துழைவாயில் எவரும் அறியாத வகையில் மர்மமான முறையில் காணப்பட்டது. இதற்குள் ஒருவர் அழைத்துச் செல்வதனை வெளியிலிருந்து எவராலும் பார்க்க முடியாது.

ஒரு கட்டடத்தில் நிலத்துக்கு கீழ் சுமார் 12 சிறைக்கூடங்கள் காணப்பட்டன. அவ்வாறு நாம் குறித்த வளாகத்தில் மூன்று கட்டடங்களைக் கண்டோம். மேலும் பல சிறைக்கூடங்கள் அமைந்திருக்க கூடும் என்றே நம்புகிறோம்.

இந்த இரகசிய சிறைகள் மிகவும் நுட்பமான முறையில் அமைந்திருந்தன. தடுத்து வைக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் ஓய்வும் வழங்கப்பட்டிருக்கலாம்.

2009 ஆம் ஆண்டே அரசாங்கத்தினால் அதிகாரபூர்வ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதனால் 2010 வரையில் பெரும் எண்ணிக்கையானோர் இந்த இரகசிய முகாமில் தடுத்து வைத்திருக்கக் கூடும்.

எனி்னும், தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தை எம்மால் திருத்தமாக கூற முடியாதுள்ளது.

குடும்பத்தினர் அளித்த தகவல்களின்படி, தடுத்து வைக்கப்பட்டோர் இரகசிய முகாமிற்குள் அழைத்துச் செல்லப்படும் வரையில் அட்டைகளின் உபயோகத்துடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அதன் பின்னரே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சுமார் 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். திருகோணமலையைப் போன்று பல இரகசியத் தடுப்பு முகாம்கள் நாட்டில் இருக்கக்கூடும்.

ஆனால், அவை குறித்து விசாரணை நடத்த போதுமான தகவல்கள் எம்மிடம் இருக்கவில்லை.

எனவே, சிறிலங்கா அரசாங்கம், காணாமற்போனோர், காணாமற்போகச் செய்யப்பட்டோர், இரகசிய தடுப்பு முகாம்கள், புதைகுழிகள் பற்றிய சரியான தகவல்களை எமக்கு அறியத்தர வேண்டும்.

காணாமல்போனோர் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன நடந்திருக்குமென நீடித்து வந்த கேள்விக்கு திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் மூலம் ஓரளவு பதில் கிடைத்துள்ளது” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்