உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்கள் பேரவை ஒன்று யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி இரவு ஒன்பது மணிவரை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், இலங்கைத் தமிழரசு கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சீ.கே. சிற்றம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபை உறுப்பினரும் புளொட் இயக்க உறுப்பினருமான க.சிவநேசன் ஆகியோர் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வடமாகாண மருத்துவர்கள் மத தலைவர்கள் என பலரும் கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் சில தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு துணைபோவதாகவும் இனப்பிரச்சினைக்கான பேச்சுக்கள் கூட இடம்பெறவில்லை என்றும் குற்றம் சுமத்திய பிரதிநிதிகள் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதேவேளை தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பண நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் கூட்டம் நடைபெறுவதை அறிந்து ஊடகவியலாளர்கள் அங்கு சென்றனர். எனினும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கூட்டம் முடிவடைந்து வெளியே வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்துக் கூறவில்லை. எனினும் கூட்டத்தில் கலந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில கருத்துக்களை கூறியதாக ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக விரைவில் ஊடங்களுக்கு அறிவிக்கப்படும் என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை இந்த பேரவையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலா் கூறியதாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் செயற்பாடுகளினால் அதிருப்தியடைந்த தமிழ் உறுப்பினர்கள் பலர் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இந்த பேரவை எதிர்காலத்தில் நன்றாக செயற்படுமானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலுவிழக்கும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

ஆனாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாளும் தந்திரத்திற்குள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பலியாவிட்டது என்றும் தொடர்ச்சியாக இவ்வாறான பிளவுகள் எற்படுமானால் தமிழர்களின் அரசியல் கோரிக்கை வலுவிழக்கும் என்றும் சுட்டிக்காட்டிய விமர்சகர்கள் புதிய பேரவை உறுப்பினர்களும் மேலும் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாளும் தந்திரத்திற்குள் சென்றுவிடக்கூடாது எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்