உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, ராணுவ தலைமையகத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டு சில தினங்களுக்குள்ளேயே இப் பதவி வழங்கப்பட்டுள்ளமையானது, ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயலென சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

இந் நடவடிக்கையானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமன்றி தேசிய அரசின் வாக்குறுதியை நம்பிய சர்வதேச சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட மிகவும் மோசமான அவமானம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள தளபதிகளுக்கு இவ்வாறான உயர் பதவிகளை வழங்கும் தேசிய அரசு, படையினர் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்துவதாக வழங்கியிருக்கும் வாக்குறுதியையும் நம்ப முடியாதென குறிப்பிட்டுள்ள யஸ்மின் சூக்கா, ஐ.நா.வின் அமைதி காக்கும் படைகளில் இலங்கை படையினரை இணைத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இறுதி யுத்தத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய ராணுவத்தின் 58ஆவது படையணியே ஆயிரக்கணக்கான பொதுமக்களின் படுகொலைக்கு காரணமாக அமைந்திருந்ததென பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மஹிந்த அரசு அவரை ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமித்திருந்தது. இந்நிலையில், தற்போதைய அரசும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு இவ்வாறான பதவிகளை வழங்குவதானது, நல்லாட்சி அரசின் மீதான நம்பிக்கையை தகர்த்தெறியும் வகையில் அமைந்துள்ளதென யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்