உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், 20 பேருக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை கொடூரமாக வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த கொடூரத் தாக்குதலில் உயிர் தப்பிய 4 பேர் அண்மையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாண சர்கோதா மாவட்டத்தில் லாகூர் நகரில் இருந்து, சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முஹம்மது அலி குஜ்ஜார் தர்காவிலேயே இந்த கோரச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் உதவியாளர்கள் சிலர் அங்கு வசித்துவந்த எதிர் தரப்பினருக்கு மயக்க மருந்து கலந்த உணவு வகைகளை கொடுத்துள்ளனர்.

இதன்பின் அவர்கள் மயங்கி சாய்ந்தபோது அவர்களை கத்தி மற்றும் கனத்த தடிகம்புகளால் தாக்கி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிகிச்சைக்காக குறித்த தர்காவுக்கு வந்திருந்த மூன்று பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

மனநிலை பாதிப்புடன் இங்கு வரும் பக்தர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் கூறப்படும் இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது. இந்த போட்டியின் விளைவாகவே குறித்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள பொலிஸார் மேலும் பலரை தேடி வருகின்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலையை தொடர்ந்து, சம்பவம் நடந்த தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்