உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


வடகொரியா வீசிய ஏவுகணை ஒன்று ஜப்பான் மீது பறந்த விவகாரம் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில், பசிபிக் பெருங்கடலை குறிவைத்து மேலும் இதைப்போல ஏவுகணைகள் வீசுவோம் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உறுதியாக கூறியுள்ளார்.ஜப்பான் மீது பறந்தது

கொரிய தீபகற்பத்தில் அடிக்கடி நீண்டதூர ஏவுகணைகளை பரிசோதித்து ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியா, அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா நடத்தி வரும் போர்ப்பயிற்சிக்கு பதிலடியாக நேற்று முன்தினம் ‘வாசோங்–12’ ரகத்தை சேர்ந்த நடுத்தர ஏவுகணை ஒன்றை ஏவியது.

இந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் மீது பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. அமெரிக்காவின் நட்பு நாடு ஒன்றில் வடகொரியாவின் நீண்டதூர ஏவுகணை ஒன்று பறந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவம் ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்கா எச்சரிக்கை

இது தொடர்பாக வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்த நாடுகள், அந்த நாட்டுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இது தொடர்பாக ஜப்பான் பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியாவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிப்பதாக உறுதிபூண்டார்.

வடகொரியாவின் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர அனுமதிக்கமாட்டோம் என அமெரிக்கா கூறியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் தங்களுக்கு எதிராக இருப்பதன் மூலம், தங்களுக்கு தாங்களே ஆபத்தை உருவாக்கிக்கொண்டுள்ளோம் என்பதை வடகொரியாவுக்கு உணர வைக்க வேண்டும் என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார்.

மிகவும் திருப்தி

ஆனாலும் தனது ஆவேசமூட்டும் செயல்களை வடகொரியா நிறுத்தாது என்றே தெரிகிறது. ‘வாசோங்–12’ ஏவுகணை வீசப்பட்டதில் மிகுந்த திருப்தி வெளியிட்ட வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்காவின் குவாம் தீவை தாக்குவதற்கு இது ஒரு அர்த்தமுள்ள முன்னோட்டமாக இருக்கும் என கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற ஏராளமான நீண்டதூர ஏவுகணைகள் பசிபிக் பெருங்கடலை குறிவைத்து வீசப்படும் எனவும், இது படைகளை நவீன அடிப்படையில் முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கு அவசியமாகும் என்றும் குறிப்பிட்ட கிம், தங்கள் எதிர்கால திட்டங்களை முடிவு செய்வதற்கு முன் அமெரிக்காவின் நடத்தையை தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சீனா தலையிட வேண்டும்

இவ்வாறு வடகொரியாவின் செயல்கள் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த நாட்டின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த சீனா தலையிட வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது ஜப்பான் பயணத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘வடகொரியாவின் இத்தகைய செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு சீனா அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்துவதில் சீனா முக்கிய பங்காற்ற முடியும்’ என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்