உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா மீது, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலர் அன்ட்ரூ கில்மோர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் சிறிலங்கா சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்ட செய்தி தம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியதாக 2017 மார்ச் 22ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் கூறியிருந்தார். அவர் இந்த விவகாரத்தை உதவிச் செயலருக்கு அனுப்பியிருந்தார்.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் கலந்து கொண்ட  எஸ் கணேசநாதன் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களும் விசாரித்திருந்தனர்.

இந்த நிலையில், மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலர் அன்ட்ரூ கில்மோர் நேற்று இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“2017 மார்ச் 7- 9ஆம் நாள்களுக்கிடையில் சிறிலங்காவின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக கணேசநாதன் உரையாற்றியிருந்தார்.

2017 மார்ச் 11ஆம் நாள் கல்முனை காவல் நிலையத்தைச் சேர்ந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கணேசநாதனின் வீட்டுக்குச் சென்று, அவரது உறவினர்கள் மிரட்டியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் கணேசநாதன் கலந்து கொண்டமையினால், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை குறித்து, நிபுணர்கள் தீவிர கரிசனை வெளியிட்டுள்ளனர்.அதேவேளை, இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நேரம் வரையில், சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை.

மனித உரிமைகள் தொடர்பாக ஐ.நாவுடன் ஒத்துழைக்கின்ற மனித உரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வது உலகெங்கும் அதிகரித்து வருகிறது.பயணத் தடைகள், சொத்துக்கள் முடக்கம், தடுத்து வைப்பு, சித்திரவதைகள் போன்ற மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை தனிநபர்களும், குழுக்களும் சந்தித்துள்ளனர்.

இது வெளிப்படையாக வெறுக்கத்தக்க செயல். ஒவ்வொரு ஆண்டும், இத்தகைய மிரட்டல்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அந்தந்த அரசாங்கங்கள், ஐ.நா நிறுவனங்களுடனும், பொறிமுறைகளுடனும் ஒத்துழைக்க வேண்டும்.

மக்கள், உரிமை, கௌரவத்துக்கு எதிரான இந்த நச்சுப்பின்னணியை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.இத்தகைய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இன்னமும் விரிவான அணுகுமுறை அவசியம்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நாடுகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் சிறிலங்கா மற்றும், அல்ஜீரியா, பஹ்ரெய்ன், புரூண்டி, சீனா, கியூபா, எகிப்து, எரித்ரியா, ஹொண்டூராஸ், இந்தியா, இஸ்ரேல், ஈரான், மொரிட்டானியா, மெக்சிகோ, மொராக்கோ, மியான்மார், ஓமான், தாய்லாந்து, பாகிழஸ்தான், ருவான்டா, சவூதி அரேபியா, தென் சூடான், சூடான், தஜிகிஸ்தான், துருக்கி, துர்க்மெனிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்டபெகிஸ்தான், வெனிசுவேலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்