உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்எதிர்வரும் புதன்கிழமை மாசி மாதம் 18 ஆம் திகதி (02-03-2011) அன்று மகா சிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே சிறப்புமிக்க மகா சிவராத்திரி ஆகும். சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டொழுகும் சைவர்களுக்கு மிக முக்கியமான விரதம் இந்தச் சிவராத்திரி விரதமாகும்.’ எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்’ என்று சிவபெருமான் சொன்னதாகச் சிவராத்திரி புராணத்தைக் கூறும் வரத பண்டிதம் தெரிவிக்கின்றது.எவ்வளவு அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி, அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி, சிவராத்திரி அன்று சிவபெருமானைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூசை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள். லௌகீக இன்பங்களை மட்டும் இச்சித்து வழிபடுவதன்றி, ஆன்ம லாபத்தை நாடி, நிலையாமையை உணர்ந்து, இம்மை, மறுமை என்ற இருமைக்கும் பயன் தரும் இந்த மகா சிவராத்திரி விரதத்தைக் கைக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு சைவசமயியினதும் கடமையாகும்.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவையாவன:

1. மகா சிவராத்திரி

2. யோக சிவராத்திரி

3. நித்திய சிவராத்திரி

4. பட்சிய சிவராத்திரி

5. மாத சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரியாகும். ஆனால் மாதந்தோறும் வரும் மாத சிவராத்திரியையோ, ஏனைய சிவராத்திரிகளையோ அனுட்டிப்பவர்கள் குறைவு. பிரளயத்தின்போது உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி. சிவனுடன் இணைபிரியாத சக்தியும் அங்கிருந்து, எம்பொருட்டு, சிவனைப் பூசித்தார். மறுநாள் பொழுது விடிந்து சிவபெருமானை வணங்கிய அம்பிகை தான் சிவனைப் பூசித்த அந்த இரவைச் சிவராத்திரி என அழைக்கவேண்டும் எனவும், அன்று முறைப்படி விரதம் அனுட்டித்து, இரவு கண் விழித்து, நான்கு காலப் பூசை செய்பவருக்கு முத்தி தரவேண்டும் எனவும் வேண்டினார். சிவபெருமானும் அவ்வாறு அருளினார்.

சிவராத்திரி விரதமிருப்போர் சிவராத்திரிக்கு முதல் நாள் விரதமிருந்து ஒரு நேர உணவு உண்ணவேண்டும். சிவராத்திரியிலன்று உபவாசமாகச் சிவசிந்தனையுடன் இருந்து, இரவு கண் விழித்திருந்து நான்கு சாமமும் வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் வழிபாடுகளை முடித்து, ஏழை எளியவர்களுக்கும் உணவளித்தபின், தான் உணவு உண்ணவேண்டும். இவ்வளவும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துள் செய்யவேண்டும். வீட்டில் முறையாகப் பூசை செய்ய முடியாதவர்கள் கோயில்களில் நடைபெறும் பூசைகளில் கலந்து கொள்ளலாம். நித்திரையைத் தவிர்ப்பதற்காகத் திருமுறைகளை ஓதுதல் மிகவும் நன்று. அதுவும் சிவபுராணம், திருவண்ணாமலைப் பதிகங்கள், திருக்கேதீச்சரப்பதிகங்கள் ஓதுதல் மிகவும் பொருத்தமானது.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை முறையாக வழிபட முடியாதவர்கள், ஷலிங்கோற்பவ| காலமாகிய இரவு 11.30 தொடக்கம் 1மணி வரை உள்ள நேரத்திலாவது விழித்திருந்து வழிபாடு செய்தல் வேண்டும். சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலமே லிங்கோற்பவ காலம் எனப்படுகின்றது.

சிவராத்திரி தோன்றிய திருத்தலம் திருவண்ணாமலை. ஒரு சமயம் படைப்புக் கடவுளாகிய நான்முகனும், காத்தற் கடவுளாகிய திருமாலும் தானே பெரியவன், தானே பெரியவனென்று தம்முள் வாதிட்டு நின்றனர். இவ்வேளை அவர்கள் அருகே ஓர் அக்கினிப் பிழம்பு தோன்றியது. ‘இவ்வக்கினியின் அடியையாவது முடியையாவது கண்டு வருபவனே பெரியவன்’ என்று ஒரு அசரீரி முழங்கியது. உடனே பிரம்மா அன்னப் பறவையாக மாறி வானத்தில் பறந்து முடியைத் தேடிப் புறப்பட்டார். திருமால் பன்றி வடிவெடுத்து நிலத்தைத் தோண்டிக் கீழே புகுந்து அவ்வக்கினியின் அடியைத் தேடிப் புறப்பட்டார். நீண்ட காலம் முயற்சித்தும் முடியாமல் தோல்வி கண்டு இருவரும் திரும்பினர்.

தாம் வெறும் கருவிகளே என்றும் தம்மை இயக்கும் ஒரு மேலான பரம்பொருள் உண்டு, அதுவே சிவப்பரம் பொருள் என உணர்ந்து அவ்வக்கினிக் கொழுந்தின் முன் மண்டியிட்டு வணங்கி நின்றனர். அவர்களின் செருக்கை அடக்கிய சிவபெருமான், அவர்களுக்கு அருள் புரிந்து அந்தச் சோதி வடிவம் தோன்றிய நாளைச் சிவராத்திரி விரத நாளாக அனுட்டிக்கும்படி கூறியதாகவும் கதையுண்டு.

‘மகா சிவராத்திரி விரதத்தைப் பற்றிப் பேசுபவர்களுக்கு மரணபயம் இல்லை. பல யாகங்கள் செய்வதைக் காட்டிலும் இவ்விரதத்தை அனுட்டிப்பது மிகவும் புண்ணியமாகும். சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் நற்பயன் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினாற் கூடக் கிடையாது. சிவராத்திரிக்கு ஒப்பான வேறு சிறந்த விரதமில்லை’ என்று பரமசிவன் பார்வதிக்கு இவ்வரதம் பற்றி எடுத்துரைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இவ்விரதம் இருபத்தினான்கு வருடங்கள் அல்லது பன்னிரண்டு வருடங்கள் அல்லது ஆறு வருடங்களாவது தொடர்ந்து அனுட்டித்தபின் முறைப்படி விரத பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்