உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

6.புண்ணியம் திரும்ப வரும்,,,“வந்த வினையும் வருகின்ற வல்வினையும், கந்தனென்று சொல்லக் கலங்கும்” ஆனால், செய்த வினையும் செய்கின்ற் தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா. நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான் அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும். கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோயிலுக்குக் கூட வரமாட்டான். இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.

என்னிடம் படம் வாங்கிய ஒருவர்,  படத்துக்காக வசூலான கணக்குக் காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.

வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.

அவர் ஏற்கெனவே ஒரு பணக்காச செட்டியாரையும் ஆச்சாள் புரத்துக்காரர் ஒருவரையும் ஏமாற்றியவர்.

அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.

ஏமாற்றி என்ன பயன்?

அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய், அன்றாடச் சோற்றுக்கே இன்று அலை மோதுகிறார்.

அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.

உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக்கொண்டு, அந்தப் ‘பாபாத்மா’ தினமும் கோயிலுக்கு வருகிறது.

நெற்றியில் கட்டுக்கட்டடாக விபூதி; இரண்டு காதிலும் கதம்ப몮 பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.

அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.

முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.

ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், கந்தன் வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான்.

ராஜாங்கம் கட்டி ஆண்டவனுங்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.

இறைவனின் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.

குளத்திலே ஒரு ரூபாயைத் தவறிப் போட்டு இட்டால், குளம் வற்றியதும் அது உன் கைக்கே கிடைக்கிறது – அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.

ஒரு நடைபாதையில் நீ கண்ணாடித் துண்டைப்போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.

குளிக்கும் அறையில் நான் எச்சிலைத் துப்பி விட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளே போன போது, அது என் காலையே வழுக்கி விட்டது.

விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.

ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்கார்ர். ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!

பக்தி செய்யும் எல்லாருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.

அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

‘உண்மையே தெய்வம்’ ‘ அன்பே தெய்வம்’ என்று இந்து மதம் சொன்னது அதனால்தான்.

‘நம்பினோர் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” உண்மைதான். ‘கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.

அதுவும் உண்மைதான்.

காலங்களை நிர்ணயிக்கிறவனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்

மதத்துறையை ‘ஆத்மார்த்தத்துறை என்பது அதனால்தான்.

நதியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.

ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாபங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!

அவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.

அறிந்து செய்யும் தவறு, தவறல்ல: அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!

ஆண்டவனின் அவதாரங்களே கூட, அறியாமல் தவறு செய்திருப்பதாக வழக்குக்கதைகள் உண்டு.

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச்சென்றார்.

அவரது அம்பாறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.
அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.

‘ஒற்றை அம்பை ஊன்றி வை என்பது வழக்கு. அம்பை ஊன்றிய ராம்பிரான், கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறினார்.

ஊன்றிய அம்பை எடுத்தார்.

அதிலொரு தேரைக்குஞ்சு குத்தப்பட்டிருந்தது.

பூமிக்குள்ளிருந்த தேரைக்குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.

தேரைக்குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.

ராம்பிரான் கண்கள் கலங்கிவிட்டன்.

“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே. ஏன் கத்தவிலை?” என்றார்.

அதற்குத் தேரை சொன்னது;

“பெருமானே! யாராவது எனக்குத்துண்பம் செய்யும்போதெல்லாம் நான் ‘ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”

ராம்பிரான் கண்ணீரோடு சொன்னார்: “தேரையே, என்னை மன்னித்துவிடு. இதுநான் அறியாமல் செய்த பிழை.”

தேரை சொன்னது:

“பெருமானே! ‘அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”

தேரையின் ஆவி முடிந்தது. நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாபக்கணக்கில் சேர்காதே.

சிறு வயதில் கடன் தொல்லை தாங்காமல் நான் ‘திருடியிருக்கிறேன்’ – என் தாயின் பணத்தைத்தான்.

திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன். கடவுளை வேண்டியிருக்கிறேன் – “இறைவா மன்னித்து விடு” என்று.

அந்தத்தவற்றைக்கடவுள் மன்னிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?

என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர் குறைவு.

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.

என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.

ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.

எழுத்தின்மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.

சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.

இவ்வளவு அறியாமைக்கிடையிலேயும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாறுகிறது.

ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?

‘தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.

செய்த பாவம் தலையிலடிக்கிறது – செய்த புண்ணியம் தலையைக்காக்கிறது.

ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.

புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!

பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.

கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.

அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.

ஆகவே பாவம் செய்யாமல், புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

நான தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.

இந்துமத்த்தின் ஒவ்வொரு அணுவையும் நான் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.

சாதாரணம் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமத்த்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.

நன்றி :- கவிஞார் கண்ணதாசன்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து