உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பெரியாரியப் பெருந்தொண்டர் பேரறிஞர் வே. ஆனைமுத்து (வயது 96) மாரடைப்பால் இன்று காலமானார்.   வே. ஆனைமுத்து  மறைவுக்கு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள், ஆய்வாளர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1925-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடியில் பிறந்த வே. ஆனைமுத்து 1940-ம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் கொள்கை வழி பயணிக்க தொடங்கினார்.1952-ம் ஆன்டு முதல் தந்தை பெரியாருடன் இணைந்து திராவிடர் கழகத்தில் பணியை தொடங்கினார்.

அன்று முதல் தாம் மரணிக்கும் வரை பெரியாரின் பெருந்தொண்டராக வாழ்வை நிறைவு செய்திருக்கிறார் வே. ஆனைமுத்து. 1957-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தை தந்தை பெரியார் நடத்தினார். அந்த சட்ட எரிப்புப் போராட்டத்தால் இந்தியாவே அதிர்ந்தது. பெரியார் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் சிறை சென்றனர்.

அப்போராட்டத்தில் 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார் வே. ஆனைமுத்து. 1970-ல் தந்தை பெரியாரின் இறுதிக் காலத்தில் சிந்தனையாளர் கழகத்தை தொடங்கினார். இதன் சார்பாக உருவாக்கப்பட்டதுதான் பெரியாரைப் பற்றிய, பெரியாரின் எழுத்துகளை தொகுத்து உருவாக்கப்பட்ட பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுப்புகள் ஆகும். இதுதான் இன்றளவும் தந்தை பெரியார் குறித்த புரிதல்களுக்கு அடிப்படை தொகுப்புகள் நூலாக இருந்து வருகிறது.

இந்த தொகுப்புகளுக்கு தந்தை பெரியாரே வாழ்த்துரையும் வழங்கியுள்ளார். தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னர் வகுப்பு வாரி இடஒதுக்கீடு தொடர்பாக இந்திய மாநிலங்கள் முழுவதும் பிரசாரம் செய்தார். மண்டல் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார்.

மொரார்ஜி தேசாய், கன்சிராம் என பல வட இந்திய தலைவர்களுக்கும் இடஒதுக்கீடு குறித்த புரிதலில் வழிகாட்டியாக திகழ்ந்தார். 1975-ல் திராவிடர் கழகத்தில் வெளியேறி பெரியார் சம உரிமை கழகத்தைத் தொடங்கினார் ஆனைமுத்து. 1988-ல் தமது பெரியார் சம உரிமை கழகத்தை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியாக்கினார்.

மாதந்தோறும் சிந்தனையாளன் எனும் இதழை வெளியிட்டு வந்தார். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.மறைந்த வே. ஆனைமுத்து மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள், ஆய்வறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து