உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கடந்த 20.12.2010 அன்று தேசிய கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட கைலாசபதி நினைவரங்கு மாலை 3.30க்கு யாழ்ப்பாணம் புதிய உயர்கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. அதில் தலைமைதாங்கிய அழ பகீரதன் ஆற்றிய உரை :.  தேசிய கலை இலக்கியப் பேரவையின் முப்பத்தேழாவது ஆண்டு நிறைவினையும் பேராசிரியர் கைலாசபதியின் இருபத்தெட்டாவது ஆண்டுநினைவினையும் நினைவுகூரும் வித்த்தில் நாம் கூடியுள்ளோம். நேற்றைய தினம் கொழும்பிலும் இன்றைய தினம் யாழ் நகரிலும் இந்த நிகழ்வை நடாத்துவதில் நாம் மகிழ்வடைகின்றோம்.

1974 இல் தோற்றம் பெற்ற தேசிய கலை இலக்கிய பேரவை அதன் முப்பத்தேழு ஆண்டுகளில் ஆற்றிய பணிகள் பல. சமூக ஒடுக்குமுறைக்கெதிராக குரல் கொடுப்பததுடன் முப்பது வருடகால சிறுபான்மை மக்களின் போராட்ட செல்நெறியை சரியான திசை மார்க்கத்தில் வென்றெடுப்பதற்கான உந்துதலையும் வழங்கிவருகின்றது. கடந்த முப்பது ஆண்டுகால ‘தாயகம்’ இதழின் ஆசிரியர் தலையங்கங்களை உற்று நோக்கி ஆய்வுக்குள்ளாக்கும் எவருக்கும் இவ்வுண்மை துலங்கும்.

பல இன்னல்களுக்கு மத்தியிலும் தாயகம் இதழின் வரவானது சரியான திசைமார்க்கத்தில் இளம் படைப்பாளிகளை இனங்கண்டு ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிராக தாயகம் இதழில் அமைந்துள்ள ஆக்கங்கள் குரல்கொடுக்கின்றன. அந்த வகையில் தாயகம் இதழின் பங்களிப்பு குறித்தான முழுமையான ஆய்வுகள் வெளிவந்ததாக தெரியவில்லை.

தேசிய கலை இலக்கிய பேரவையின் பணிகளில் முக்கியமாக எடுத்துரைக்க்கூடிய பணி நூல் வெளியீட்டு பணியாகும். ஆயிரம் பூக்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்ற மாவோவின் மேற்கோளுக்கு அமைய நூல் வெளியீடுகள் அமைந்துள்ளன.

நூல் வெளியீடுகள் என்பதோடு மட்டும் நின்றுவிடாது புத்தக பண்பாட்டை வளர்க்கும் வித்த்தில் நூல் கண்காட்சிகள், கருத்தரங்குகள் பலவற்றை நடாத்தியதுடன் அண்மையில் ஒக்டோபர் மாத்த்தில் வாசிப்பு மாத்த்தினை ஒட்டி யாழ்ப்பாணத்தில் புத்தக பண்பாட்டு பயணம் ஒன்றை மூன்று நாட்கள் நடாத்தியது. சுமார் இருபது கிராமங்களில் இப்பயணத்தை மேற்கொண்டதன் ஊடாக  புத்தக வாசிப்பினை ஊக்குவித்துள்ளார்கள். இதன் வெளிப்பாடாக காலையடி மறுமலர்ச்சி மன்றத்தினர் தொடர்ந்த மாதங்களில் ஒரு நூலகத்தை அமைத்து நடாத்துவது தேசிய கலை இலக்கிய பேரவையினரின் வழிகாட்டலால் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய கலை இலக்கியப்பேரவையினால் அவ்வப்போது இலக்கிய விமர்சன கூட்டங்கள், கவிதை படிப்பு வட்டங்கள், வாசகர் வட்டம் என்பவற்றை நடாத்தியதுடன் யுத்த காலப்பகுதியில் கையெழுத்துப் பிரதிகளையும் வெளியிட்டு தமது பணியினை தொடர்ந்த்து குறிப்பிடக்கூடியது.

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் அதன் தத்துவார்த்த தளத்தில் நின்று சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தை உருவாக்கி இளைஞர்கள் மத்தியில் பல்கலைக்கழக கல்வி முறைக்கு மாற்றாக சுய சிந்தனை வளர்ச்சியை உருவாக்குவதில் கணிசமான காத்திரமான பங்களிப்பை வழங்கியது.

கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு என விரிந்த தளங்களில் அதன் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது. நூறு இடங்களில் பௌர்ணமி தினங்களில் புத்தகப்பண்பாட்டு நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டுள்ளது.

உலகமயமாதல் சூழலுக்கு அமைவாக யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தாராளமயமாதல், துரித அபிவிருத்தி, மேற்குமயமாதல், நச்சுகலாசார விதைப்பு என வடபிரதேசம் மாற்றலுக்கு உள்ளாக்கப்படும் இத்தருணத்தில் மக்களை சரியான செல் நெறியில் வழிப்படுத்த வேண்டிய பணி எம்முன் விரிந்திருக்கின்றது என்பதை உணர்ந்து நாம் அனைவரும் கடந்த காலப்பட்டறிவில் எம்மை புடம்போட்டு எமது கலை இலக்கிய பணியை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த வகையில் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் இருபத்தெட்டாவது ஆண்டினை நினைவுகூருவது முக்கியத்துவமுடையது.

பேராசிரியர் கைலாசபதியை நாம் இருபத்தெட்டாவது வருடத்திலும் நினைவுகூருகிறோம் என்றால் அவர் சார்ந்த தத்துவம், அவர் காட்டிய ஒப்பியல் நோக்கு, சமூகவியல் பார்வை, வரலாற்றை வர்க்கங்களின் வரலாறாக பார்க்கும் பார்வை என்பதாலேயாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பும் அதன் முதலாவது தலைவராக இருந்து வழிநடாத்தியதில் அவரது நிர்வாகத்திறனும் வியக்கத்தக்கது.

நான் அவரைக்கண்டது தேசிய கலை இலக்கிய பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட பாரதி நூற்றாண்டு ஆய்வரங்க தொடரிலேயே. அவரது ஆய்வுத்திறனை அவரது நூல்கள் இன்றும் பறைசாற்றுவதுடன் இன்றும் என்றும் மாணாக்கர்களுக்கு உற்ற துணையாக அவரது நூல்கள் விளங்குகின்றன. பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் ஆய்வாளர்களை உருவாக்கிய பெருமை அவரையே சாரும்.

இவரது பத்தாவது ஆண்டு நினைவாக தேசிய கலை இலக்கிய பேரவை கைலாசபதியின் பன்முகப்பார்வை எனும் தலைப்பில் ஆய்வரங்கை நடாத்தி அதனை நூலுருவிலும் கொண்டுவந்த்து. அந்த வகையில் அவரது நினைவு தினத்தை இன்றும் நினைவு கூர்ந்து இந்நினைவரங்கை ஒழுங்கமைத்துள்ளோம்.

-இந்நிகழ்வில் கல்வி, கலை, பண்பாட்டில் சமூக நோக்கு எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும், கலை இலக்கியமும் சமூக ஒடுக்கு முறையும் எனும் தலைப்பில் தாயகம் ஆசிரியர் க.தணிகாசலம் அவர்களும் உரையாற்றினார்கள்.

3 Responses to “யாழ்-புதிய உயர்கலைக்கல்லூரி மண்டபத்தில் அழ பகீரதன் ஆற்றிய உரை”

 • thavam:

  நாம் எலாவற்றையும் மறந்து கருத்தை வெளிபடுத்து வது மிகவும் கவலையாகிறது.நன்றியுடன் தவம்.

 • manithan:

  பார்க்கவும் வாசிக்கவும் நன்றாகவும் பெருமையாகவும் இருந்தாலும் ஏன் இந்த அறிவு சார் சிந்தனைகள் தன் சமூகத்துக்கு என்ன செய்கிறோம் என நினைப்பதே இல்லையா அல்லது செய்யவருபவர்களுக்கு ஆதரவு கொடுக்கவும் தவறுகிறீர்களே ஏன்?

  • அழ பகீரதன்:

   உங்கள் கருத்துக்கு நன்றி. ஆலயங்களுக்கு காசு கொடுக்கச்சொல்கிறீர்களா அல்லது அரசுக்கும் அவ்வப்போது அதிகாரத்துக்கு வருபவர்களுடன் கைகோர்த்து செயற்படுபவர்களுடன் ஐக்கியப்படச்சொல்கிறீர்களா?

Leave a Reply for manithan

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து