உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

01
02

பனிப்புலம் கிராமமும் முத்துமாரி அம்பாள் வழிபாடும்

 பற்றிய ஓராய்வு.

————————————-

ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதுவதில் எவ்வளவு சங்கடங்கள் ஏற்படும் என்பதை நான் நன்கு அறிவேன் .இங்கு பல விமர்சனங்களும் கேள்விகளும் எழலாம்.எனினும் கேள்விகள் பிறந்தாலே உண்மையும் தெளிவும் கிடைக்கும் .இதை அடிப்படையாகக் கொண்டே இவ் ஆய்வினை எழுதத் துணிந்தேன் .எந்த விமர்சனங்களையும் ஏற்கத் துணிந்து கொண்டே எழுத முற்படுகின்றேன் .எனவே இங்கு காணப்படும் தவறுகளைச் சுட்டும் போது அவற்றை ஏற்கவும் தயாராய் உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

 சைவக் கிராமம்

பனிப்புலம் கிராமம் ஒரு பூரண சைவ சமயிகள் வாழும் கிராமமாகும் .அமெரிக்க மிசனரி மதம் பரப்பும் காலத்தில் இங்குள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில குடிகள் மதம் மாறியது துரதிஸ்டமே .இருந்தும் இன்றும் பனிப்புலம் ஒரு பூரண சைவக் கிராமமாகவே இருக்கின்றது .இக் கிராமம் மிகப் பழம் காலத்தில் தென் இந்திய வர்த்தகர்களான செட்டிமார் குலத்தின் பாரம்பரிய பிரதேசமாக இருந்ததாக கர்ண பரம்பரை வரலாறு கூறுகின்றது .இது இங்குள்ள பல ஆலையங்கள் அவர்களாலேயே அமைக்கப் பட்டுப் பரிபாலிக்கப் பட்டு வந்ததன் மூலம் அறிய முடிகிறது .பனிப்புலம் என்னும் கிராமம் யாழ்ப்பான ராச்சியத்தை ஆரம்பித்து வைத்த முதல் மன்னன் விஜய காலிங்க (கூழங்கை )ஆரியன் காலத்தில் ஆரம்ப மானதெனக் கருத இடமுண்டு .இவன் இந்தியாவிலிருந்து இங்கு வந்த போது யாழ்ப்பாணத்தில் தமிழ்க் குடிகள் குறைவாக இருந்ததால் தனது ஆட்சிக்குத் தேவையான பல தொழில் சார் குலத்தவரை இங்கு அழைத்து வந்ததாக யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது .அவர்களில் ஒரு பகுதியினர் சைவ ஆலைங்களப் பரிபாலிக்கவென இங்கு அழைத்து வரப்பட்ட வீர சைவ குலத்தவர் என்பது யாழ்ப்பாணச் சரித்திர வாயிலாக அறிய முடிகிறது .

 வீர சைவர்

இந்தியாவில் சைவம் இடத்துக்கிடம் சில வேறுபாடுகளுடன் கடைப் பிடிக்கப் படுகிறது .இந்தியாவின் வடபகுதியில் காஸ்மீர் சைவம் எனவும் ,மைசூர் மாநிலமான கன்னடத்தில் “வீர சைவம் ‘எனவும் ,தமிழ் நாட்டில் சித்தாந்த சைவம் எனவும் வழங்கப்பட்டு வருகிறது .இந்த மைசூர் மாநில வீர சைவ குலத்தவரே தமிழ் நாடுமூலம் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக ஊகிக்க முடிகின்றது .யாழ்ப்பான மன்னன் காலிங்க ஆரியன் “வீர சைவன்”எனவும் அவன் வீர சைவர்களை இங்கு அழைத்து வந்ததாகவும் யாழ்ப்பாணச் சரித்திர நூல்களான “யாழ்ப்பாண மன்னர் பரம்பரை “,”ஈழத்தவர் வரலாறு “என்பவற்றில் கலாநிதி .க.குணராசா அவர்கள் கூறியுள்ளார் .எனவே இக்காலத்தில் வந்த வீர சைவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியேறி இருக்கலாம் .அவற்றில் ஒரிடமே பனிப்புலம் ஆக இருக்கலாம் .

 பணிப்புலம்

பணிப்புலம் என்னும் இப் பெயரை நாம் சற்று ஆழமாக ஆராய வேண்டியுள்ளது .பணி என்பது தொண்டு எனப் பொருள்படும் .புலம் என்பது இடம் ஆகும் .எனவே பணி +புலம் =பணிப்புலம் ஆகும் .அதாவது தொண்டு செய்வோர் வாழும் இடமே “பணிப்புலம் “என்பதாகும் .இதனாலேயே இவ்விடம் “பணிப்புலம் “என அழைக்கப் பட்டதாகக் கூறுவர்.இவ்விடம் முற்காலத்தில் ஒரு சிறிய இடமாக இருந்திருக்கலாம் .அதாவது பணிப்புலம் அம்பாள் ஆளையத்தைச் சூழவுள்ள சில குடிகளே “பணிப்புலம் “வாசிகளாக இருந்துள்ளனர் .

 பண்டாரம்

பனிப்புலம் என்பதை இன்னும் விளக்குகையில் இங்கு வாழ்ந்த வாழும் குலமான “பண்டாரம் “என்னும் குலத்துக்கும் இந்த இடத்துக்கும் பெயரில் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம் .”பண்டாரம் ‘,”பணிப்புலம்”ஆகிய இரண்டு பெயரும் ஒன்றை யொன்று தொடர்புடையனவாகும் .”பண்டாரம் “என்ற சொல்லைப் பிரிப்போமானால் ,பண் -இசை ,ஆரம் -மாலை என்பதாகும் .பண் +ஆரம் =பண்ணாரம்என்பது இசை மாலையால் இறைவனை அர்ச்சிப்பவர்கள்என்பது அர்த்தமாகும் .பண்ணாரம் என்பது பிற்காலங்களில் மருவிப் “பண்டாரம் “ஆனது எனக் கொள்வாரும் உளர் .இது அவர்களின் தொண்டு வாழ்க்கையைக் குறிக்கும் காரணப் பெயராகும் .

சாதியமைப்பு சமைய சம்பிரதாயங்கள் கடுமையாக நிலவிய அக்காலத்தில் “பண்டாரம் “என்னும் குலத்தினர் ஒரு மிக உயர்ந்த நிலையில் வைக்கப் பட்டனர் .”பண்டாரம் “என்பது “சிவனடியார் “என்றும் அதனால் இவர்கள் சிவனடியார் பரம்பரை எனவும் மிகவும் மதிக்கப் பட்டனர் .

 பண்டார வாரியம்

முற்காலத்தில் ஆலையங்களில் இன்று பரிபாலன சபை இருப்பதுபோல் “பண்டார வாரியம் “என்னும் சபைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது .இவர்கள் ஆலையம் சம்மந்தமான சகல நடவடிக்கைகளையும் கவனித்து வந்தனர் .”பண்ணவன் “என்பது பாடகன் என்னும் ஒரு பொருளையும் உடையது .எனவே பண்ணவன் என்ற சொல்லும் “பண்டாரம் “என்ற சொல்லுடன் ஒத்துப் போவதால் பண்ணவனும் பண்டாரமாகி இருக்கலாம் எனவும் ஊகிக்கலாம் .

இவர்கள் ஆலையங்களில் தொண்டு செய்வதும் ,பாமாலை பாடுவதும் ,பூமாலை புனைவதும் ,சங்கு நாதம் ஒலிப்பதும் என தொண்டுக் காரியங்களில் ஈடுபடுத்தப் பட்டனர் .இதற்காக ஆலைய வருவாயில் ஒருபகுதி இவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு வந்தது .மற்றும் ஆலைய உற்சவ காலங்கள் திருவெம் பாவை போன்ற புண்ணிய காலங்களில் ஊரூராகச் சென்று இசையுடன் திருமுறை ஓதுவதும் சங்கு ஊதுவதும் ,அதன் மூலம் கிடைக்கும் அன்பளிப்புகளும் இவர்களின் வாழ்க்கையை ஒட்டின .

பண்டாராத்தியன்

 “பண்டாரம் “என்பதற்கு இன்னுமொரு பொருள் கொள்ளப்படுகிறது .”பண்டாராத்தியன் “என்னும் சொல் மருவிப் “பண்டாரம் “என வந்ததாகவும் கொள்ள இடமுண்டு .பண்டு -பழைய ,முற்கால என்பதாகும் .ஆராத்தியன் -வீர சைவப் பார்ப்பனன் .எனவே பண்டு +ஆராத்தியன் =பண்டாராத்தியன் என்பது பழைய அல்லது முற்கால வீர சைவப் பார்ப்பனன் என்பது ஒரு பொருளாகும் .இதன்மூலம் “பண்டாரம் “என்னும் குலம் முற்காலத்தில் பிராமணரில் ஒரு இருந்தமை தெரிய வருகிறது .பின்னர் இக்குலம் தனியே பண்டாரம் என்னும் பெயரைப் பெற்றிருக்கலாம் .

முத்துமாரி அம்பாள் வழிபாடு

முத்துமாரி அம்மனைக் குல தெய்வமாகக் கொண்டு இவர்கள் ஊரூராகச் சென்று முத்துமாரி அம்மன் வேடம் தாங்கி கரகாட்டம் ஆடி மக்களைப் பக்தி நெறிக்குட்படுத்தினர்.அவ்வகையிலேயே பணிப்புலம் முத்துமாரி அம்மன் வழிபாடும் தோன்றியதாக அறிய முடிகிறது .இக் கருத்துக்கு வலுச் சேர்க்க அளவெட்டி என்னும் இடத்திலுள்ள தவளகிரி முத்துமாரி அம்மன் ஆலையம் இக்குலத்தவர் களாலேயே அமைத்து வணங்கப் படுவதைக் காணமுடிகிறது . 

இன்னும் இவ் ஆலையம் இருக்கும் இடம் ஆரம்பத்தில் ஒரு பன்னைக் காடாக இருந்ததாகவும் இங்கு வாழ்ந்த மிகப் பழம் குடிமகன் ஒருவர் கனவின் நிமித்தம் (பூசாரி குடும்பம் )அவரால் இவ் ஆலையம் அமைக்கப் பட்டதாகவும் பணிப்புலம் முத்துமாரியம்மன் ஆலைய வரலாறு கூறுகிறது 

சைவ சமயத்தின் ஒரு இருண்ட காலம்

இலங்கையில் போர்த்துக்கீசர் காலம் இங்குள்ள சமயங்களின் இருண்ட காலமாக இருந்தது .புத்த சமயமும் சைவசமயமும் அழிக்கப்பட்டு கிறிஸ்த்தவ சமயம் பரப்பும் ஒரு அடக்கு முறைக் காலமாக இருந்தது .கி .பி 1505 ல் இங்கு வந்த போர்த்துக்கீசர் தம் மதம் பரப்புவதற்காக பெரும் அட்டூழியங்களைச் செய்தனர் .இவர்களின் ஆட்சி கி .பி .1505 -1658 வரை இங்கு நிலவியது .இவர்கள் தமது மதத்தை இங்கு வலிந்து பரப்பினர் .தென்பகுதியில் பெருமளவில் மதம் மாறினாலும் தமிலராட்சிக் குட்பட்ட பகுதியில் இவர்கள் ஆட்டம் பலிக்கவில்லை .அப்போது யாழ்ப்பாண மன்னனாக இருந்த சங்கிலி தீவிர சைவப் பற்றுடையவன் .இவனின் உறுதியான சமயப் பற்று இங்கு எளிதில் கத்தோலிக்கம் புகுத்த முடியாதிருந்தது .மன்னார் பகுதியில் சில போர்த்துகீச பாதிரிமார் வலுக் கட்டாயமாக ஆயிரக் கணக்கானோரை மதம் மாற்றிய செய்தியை அறிந்த சங்கிலி மன்னன் பாதிரிமார் உட்பட ம.தம் மாறிய அனிவரையும் சிரச்சேதம்செய்வித்தான்

 ஆனால் தமிழரின் சாபக் கேடு ,கூடப்பிறந்த குணம் அன்றும் விடவில்லை .சகோதரப் பூசல் துரோகம் சங்கிலியையும் 1621 ல் யாழ் வீரமா காளியம்மன் கோயிலடியில் போர்த்துக்கீசருடன் நடந்த கடும் சமரின்போது காட்டிக் கொடுத்து சங்கிலி சிறை பிடிக்கப் பட்டு கொல்லப்பட்டான் .சங்கிலி மரணத்துடன் யாழ்ப்பாணத் தமிழரசு அஸ்தமித்தது .போர்த்துக்கீசரின் கொடுங்கோலாட்சி ஆரம்பமானது . 

இக் காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் தீவிர மதமாற்றம் இடம் பெற்றது .மதமாற்றம் மட்டுமல்லாது சைவ சமய ஒழுக்கங்களுக்குப் பெருந் தடைகள் விதித்தார்கள் .சைவ ஆலையங்கள் இடிக்கப்பட்டு அக் கல்லுகளைக் கொண்டே கத்தோலிக்க தேவாலயங்கள் அமைத்தனர் .அக் காலத்தில் சைவர்கள் தமது சைவ வழிபாட்டுக் கருமங்களை மறைந்தே செய்து வந்தனர் ..திரு நீறணிதல் வாலைஇலையில் உணவுன்னல் போன்ற பல சைவ முறைகளுக்குத் தடை விதித்தனர் .இதனால் சைவர்கள் தமது வீட்டுக் காணிகளில் மர நிழல்களில் சூலம் வைத்தே வழிபட்டனர் .ஆலையங்கள் இடிக்கப் படுவதால் அங்குள்ள விக்கிரகங்களை பூசகர்கள் கிணறுகள் குளங்கள் முதலியவற்றில் இட்டு மறைத்தனர் 

செட்டிமார் குலம் வெளியேற்றம்

போர்த்துக்கீசரின் அட்டூளியத்தில் நடந்த இன்னு மொரு பாதகமான செயல் “பசுவதை “.அதாவது ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள போர்த்துக்கீச தளங்களுக்கு அக் கிராமத்திலுள்ள மக்கள் நாள் தோறும் ஒரு மாடு உணவுக்காக வழங்க வேண்டுமெனத் தளபதியால் கட்டளை பிறப்பிக்கப் பட்டது .இதை விரும்பாத ,செய்ய முடியாத சுத்த சைவ ஆசால சீலர்களான செட்டிமார் பலர் குடும்பம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறித் தமிழ் நாட்டில் குடியேறினர் .யாழ்ப்பாணத் தமிழரசர் செல்வாக்கில் பெரும் நிலச் சுவான்தார் களாக வாழ்ந்தவர்கள் தம் நிலபுலங்கள் அனைத்தையும் இங்குள்ளவர்களுக்கு விற்றும் தங்களால் பரிபாலிக்கப்பட்ட இந்து ஆளையங்களுக்குத் தர்மமாக எழுதியும் இன்னும் சிலர் இந்தியாவிலுள்ள சிதம்பரம் ஆலையத்துக்குத் தர்மசாதனமாக எழுதியும் சென்றனர் .அவர்கள் வாழ்ந்த இக் கிராமத்து இடங்கள் அனைத்தும் பின்னர் பனிப்புலம் என்னும் பெரும் கிராமமாக விரிவடைந்தது .போர்த்துக்கீசர் காலம் முடிந்து கி .பி .1658 ல் ஒல்லாந்தர் ஆட்சி ஏற்ப்பட்டது .இக் காலம் ஓரளவு மதச் சுதந்திரம் ஏற்ப்பட்டாலும் சலுகைகளுடன் மதம் மாற்றும் முயற்ச்சி நடைபெற்றது .இதன் பின் கி .பி 1796 ல் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்ப்பட்ட போதுமுற்றாக மத சுதந்திரம் ஏற்ப்பட்டு சைவர்கள் மீண்டும் சைவாலையங்களை அமைத்து மறைத்து வைக்கப் பட்ட விக்கிரங்களை வெளியே எடுத்து சைவ சமய நெறியுடன் வாழ்ந்தனர் . 

பன்னைப் புலம்

இருண்ட காலமான போர்த்துக்கீசர் காலத்தில் சைவர்கள் விக்கிரகங்களை ஒழித்து வைத்த இடங்களில் ஒரு இடமாக குறித்த பன்னைப் பற்றை இருந்திருக்கலாம் .நீண்ட காலங்களுக்குப் பின் பூசாரி கனகருக்கு அம்பாள் காட்சி கொடுத்திருக்கலாம் .இதனாலேயே பன்னைப் புல அம்பாள் எனப் பட்டிருக்கலாம் .பின்னர் இக் குலப் பெயருடன் இணைந்து பணிப்புலமாக மருவியதாகவும் கூறப் படுகிறது .

எப்படி இருப்பினும் “பனிப்புலம்”என்பதர்க்குக் கூறப்படும் வெவ்வேறு காரணங்கள் பணி செய்யும் குலத்தினர் வாழ்ந்த இடம் என்பது உறுதியாகின்றது .சாதிய அமைப்பு முறைகள் மாற்ற மடியும் இக் காலத்தில் “பண்டாரம் “என அழைக்கப் படும் இச் சமூகம் மீண்டும் “வீர சைவர் “என அழைக்கப் படுகின்றனர் என்றும் பணி செய்யும் குலம் வாழ்ந்த இடமே “பனிப்புலம்”என்பதும் முடிவாகும் .

 

ஆய்வு செய்தவர்

 ஆ .த .குணத்திலகம்

 ஓய்வு நிலை ஆசிரியர்

 அகில இலங்கை சமாதான நீதிவான் .

சாந்தை ,சில்லாலை .

2 Responses to “பனிப்புலம் கிராமமும் முத்துமாரி அம்பாள் வழிபாடும்”

 • வியக்க வைக்கும் அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகள். பலவும் வியப்பின் விளிம்பிற்கு எம்மை அழைத்துச் சென்றாலும். மேற்கத்திய கலாச்சாரத்தின் மீது மோகம் கொண்டு வாழ்ந்தாலும். விலை மதிப்பற்ற ஒன்று உள்ளது! அது நம் முன்னோர்கள் எழிதி வைத்த அடையாளங்கள்.மேலும் எம் ஊரின் வரலாற்றை சிறப்பித்து எழதிய ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அருமையான ஆக்கபூர்வமான ஆழமானபதிவு பயனுள்ளது. பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி.

 • S.Sivanantham:

  எமதூரினதும்,மக்கள் வாழ்வின் மறுமலர்ச்சியிலும் மாற்றம் வேண்டுமென எண்ணி அளவிடற்கரிய ஆர்வத்துடனும்,விடாமுயற்சியுடனும், தன்னிடமுள்ள அனைத்துத் திறமைகளையும் பிரயோகித்து, ஓய்வின்றி,சோர்வின்றி, *இடரெது வரினும் தொடரும் என் பணி* என்ற இலட்சிய வேட்கையுடன் ஒரு தனிமனிதனாக உழைத்துக்கொண்டிருக்கும் இக் கட்டுரையாசிரியருக்கு முதற்கண் எனது பணிவன்பான வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்து, எனது கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
  அதாவது, இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானத்தின் விந்தைமிகு வளர்ச்சியினால் உலகமானது சுருக்கப்பட்டு, மக்கள் தொடர்பு சாதனங்கள் வகைவகையாக தோற்றம் பெற்று, இல்லங்களிலும், கைகளிலும் தவழ்ந்து கொண்டிருப்பதால் மக்களிடமிருந்து பாரம்பரியக் கலாச்சாரப், பண்பாடுகள், ஒழுக்க நெறிமுறைகள் விலகிச் சென்றுகொண்டிருப்பது மட்டுமன்றி,அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.இதனால் எம்மினத்தின் எதிர்காலச் சந்ததியினராகிய இளைஞர்களும், சிறுவர்களும் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமைகளாகி, சீரழிந்து கொண்டிருப்பது மட்டுமன்றி, இன, மத, மொழிக் கலாச்சாரப் பண்பாடுகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கு விருப்பமின்றி, விஞ்ஞானத்தின் விந்தைகளில் மயங்கி, மெய்ஞானத்தின் மேன்மைமிகு உண்மைகளை உணராது தவறான பாதைகளில் சென்றுகொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் இக் கட்டுரையானது ஓரளவுக்கேனும் இளம் சமுதாயத்தினர் எம்மினத்தின் வரலாற்றினை அறிந்து நல்வழியில் நடந்திட உதவும் என்பது எனது கருத்தாகும்,

  எனவே, மீண்டும் இவ்வாசிரியப் பெருந்தகைக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவர் பணி வெற்றியடைய எல்லாம் வல்ல எம் பிராட்டி துணைநிற்க வேண்டிப் பிரார்த்தித்து விடைபெறுகின்றேன்.
  ஓம்! சக்தி! ஓம்!

  நன்றியுடன்
  சி.சிவானந்தம்
  நோர்வே

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து