நாவுறுவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதி ஒருவர், அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கை கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று புதன்கிழமை தீக்குளித்துள்ளார்.நாவுறுவிலுள்ள நிபொக் தடுப்பு நிலையத்தில் தங்கியிருந்த ஒமிட் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி 23 வயதான ஈரானிய அகதி, அந்த தடுப்பு நிலையத்துக்கு அன்றைய தினம் காலை ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் விஜயம் செய்ததையடுத்து தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.அவர் இனிமேலும் என்னால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என கூச்சலிட்டவாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது அங்கிருந்த ஏனையவர்கள் அவரது உடையில் பரவிய தீயை அணைக்க முயன்ற போதும், தீ அவரது ஆடையிலிருந்து உடலுக்கு வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து அந்த இடத்திற்கு மருத்துவ உத்தியோகத்தர்கள் வரும் வரை அவரது உடல் அங்கு புகைந்தபடி இருந்துள்ளது.
தொடர்ந்து உடலில் 80 சதவீதமான பகுதி எரிந்த நிலையில் காணப்பட்ட அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவர் தனது உடலில் தீயை வைக்கும் முன்னர், “நாம் (அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக் கொள்கைகளால்) களைப்படைந்துள்ளோம். இந்த நடவடிக்கை நாம் அதனால் எவ்வளவு தூரம் சோர்வடைந்துள்ளோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தடுப்பு நிலையத்துக்கான தமது விஜயத்தையொட்டி இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் கவலையை வெளியிட்டுள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டத்தொன் மெல்போர்ன் நகரில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கையில், தீக்குளித்த குறிப்பிட்ட நபரை சிகிச்சைக்காக அவுஸ்திரேலிய பிரதான நிலப் பகுதிக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஆனால் சிகிச்சைக்குப் பின்னர் அவர் திரும்பவும் நாவுறு தீவிற்கு அனுப்பப்படுவார் எனவும் கூறினார்.
நாவுறுவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமைகள் குறித்து தான் அனுதாபத்தைத் தெரிவிப்பதாக கூறிய அவர், ஆனால் நாட்டின் எல்லைப் பாதுகாப்பைக் கருத்திற் கொள்கையில் அவுஸ்திரேலியா தயவு தாட்சண்யம் காட்ட மாட்டாது என்று தெரிவித்தார்.“சட்டவிரதமாக படகுகளில் வருபவர்கள் ஒருபோதும் எமது நாட்டில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்” என அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே மேற்படி அகதிகளுக்கான தடுப்பு நிலையத்தில் தங்கியிருந்த நால்வர் சலவைத் தூளை விழுங்கி தமக்குத் தாமே தீங்கு விளைவிக்க முயன்றதாக அகதிகள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் நாள் செவ்வாய்க்கிழமை பபுவா நியூகினியிலுள்ள உச்ச நீதிமன்றம் அந்நாட்டின் மனுஸ் தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்த க்கது.
அவுஸ்திரேலியாவானது அந்நாட்டிற்கு சட்டவிரோதமாக படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களது புகலிடக்கோரிக்கை பரிசீலிக்க ப்படும் வரை நாவுறு மற்றும் பபுவா நியூகினி ஆகிய கடலுக்கு அப்பாலான நாடுகளிலுள்ள பின்தங்கிய தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது.